கமலதேவி

கடல்

வாசகசாலை

 200.00

SKU: 1000000032230_ Category:
Author

format

Year Published

2021

Imprint

கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும் அபத்தங்களையும் தொட்டுக் காட்ட முயல்கின்றன. விவசாயத்தில் தொழிற்படும் மண் சார்ந்த நுட்பங்களைப் பேசுகின்றன. கிராமத்து வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விழுமியங்களை நினைவுபடுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக வாழ்வின் பொருள் குறித்தும் அல்லது பொருளின்மையைக் குறித்துமான பலமான கேள்விகளை எழுப்புகின்றன. எந்தவொரு கதையையும் அவை முழுமையாக விரித்துச் சொல்வதில்லை. கதையின் மையத்தை மிகக் குறைவான சொற்களில் அவை குறிப்புணர்த்துகின்றன. சம்பவங்களை அல்லாது அவற்றுக்கு முன்னும் பின்னுமான உணர்வு நிலைகளையே முதன்மைப்படுத்துகின்றன. இதனால் கதையை வாசித்து முடித்த பின்பும் ஏதோவொன்று முழுமையடையாதது போலொரு உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால், அந்த உணர்வுக்குப் பின்னால் அழுத்தமான சில கேள்விகளை எழுப்புவதன் வழியாக கதையைக் குறித்து மீண்டும் யோசிக்கச் செய்கின்றன. எனவே, அவை வழக்கமான கதைப்பாணியிலிருந்து மாறுபட்டு கலைத்துப் போடப்பட்ட சித்திரங்களாகவே காணக் கிடைக்கின்றன. சரியான முறையில் ஒவ்வொரு துண்டையும் சேர்க்கும்போது மட்டுமே மொத்த உருவமும் புலப்படும்.

– எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்