Author: பெஞ்சமின் சூல்ட்சே

Pages: 216

Year: 2021

Price:
Sale priceRs. 250.00

Description

பொது ஆண்டு 1500களுக்குப் பிறகு முதல் அலையில் இந்தியா வந்த ஐரோப்பியர்களது வருகையின் முதன்மை நோக்கமாக இருந்தது சமயம் பரப்புதல் என்றாலும், ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பணியாளர்கள் தமிழ் மண்ணில் ஆற்றிய பொதுநலச் சேவைகளும், தமிழ்ப்பணிகளும், கல்விப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. இதைக் கருத்தில், கொண்டு கல்வி அனைவருக்கும் கிடைத்திராத கடந்த சில நூற்றாண்டுகளில், தமிழகத்தில் பேதமின்றி அனைவரும் கல்வி பயில தக்க ஏற்பாடுகளையும் கல்விக்கூடங்களையும் உருவாக்கி ஒடுக்கப்பட்டிருந்த பிரிவினருக்குக் கல்வி வழங்கிய ஜெர்மானியச் சமயப்பணியாளர்களுக்கு இந்த நூலைக் காணிக்கை செய்துள்ளார் நூலாசிரியர். போற்றத்தக்கச் செயல் இது. அத்தகைய கிறித்துவ இறைப்பணியாளர்களுள் ஒருவரான பெஞ்சமின் சூல்ட்சே என்பவர் எழுதிய சென்னை நகர் மக்களின் வாழ்வியல் குறிப்புகளின் தொகுப்புதான் காலச்சுவடு பதிப்பகம் மூலம் தமிழ்மரபு அறக்கட்டளையின் முனைவர் க. சுபாஷிணி வெளியிட்டுள்ள ‘மெட்ராஸ் 1726′ என்ற நூல். பெஞ்சமின் சூல்ட்சே எழுதிய ‘மெட்ராஸ் ஸ்டாட்’ என்ற ஜெர்மானிய மொழி நூல் இந்த ‘மெட்ராஸ் 1726′ என்ற நூலாக உருவாகியுள்ளது. ஓர் ஐரோப்பியராகத் தன் பார்வையில் சென்னை குறித்துத் தான் அறிந்தவற்றை பெஞ்சமின் சூல்ட்சே மற்ற ஐரோப்பியச் சமயப் பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் எழுதிய நூல் இது. இதன் மூலம் அக்கால சென்னை மக்களின் வாழ்வியலை, உணவுகளை, பழக்க வழக்கங்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள் முன்னுரையையும், ஜெர்மானிய ஆய்வாளர் பேராயர் ஆனந்த் அமலதாஸ் அவர்கள் அணிந்துரையும் வழங்கி தங்கள் துறைசார் வல்லுநர்கள் பார்வையில் கருத்துக்களை வைத்திருப்பது நூலுக்கு அணி செய்வதாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஐரோப்பியரின் எதையும் ஆவணப்படுத்தும் வழக்கம் கடந்த நூற்றாண்டுகளில் இந்தியாவில் வாழ்ந்த சாதாரண மாக்களின் வாழ்வியலைப் பதிவுசெய்துள்ளது. 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகை, அவர்கள் கொணர்ந்த அச்சு இயந்திரம் ஆகியவற்றினால் காகித அச்சு ஆவணங்கள் வரலாற்றுத் தகவல்களைத் தந்து உதவின. ஐரோப்பியர் சமயம் பரப்ப, வணிகம் செய்ய, ஆட்சி செய்ய என்ற பல பரிமாணங்களில் இந்தியாவுடன் தொடர்பை வளர்த்துக் கொண்டதால் அவர்களின் ஆவணங்களும் சமயம், தனிமனித செயல்பாடுகள், நிர்வாகம் என்ற பிரிவுகளில் தமிழகத்தின் வரலாற்றுக்குச் சான்றுகள் தந்துள்ளன.

You may also like

Recently viewed