என் பார்வையில் பிரபலங்கள்


Author: பி.ஆர்.துரை

Pages: 316

Year: NA

Price:
Sale priceRs. 250.00

Description

நூலாசிரியர் தனது வாழ்நாளில் சந்தித்த 73 பிரபலங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். சிறுவனாக நாடகங்களிலும், திரைப்படங்களிலும் தனது கலை வாழ்வைத் தொடங்கியவர் பி.ஆர்.துரை. இதில் எஸ்.வி.சகஸ்ரநாமம், ஜெமினி கணேசன், ஏ.பி.நாகராஜன், நாகேஷ் போன்ற முந்தைய தலைமுறை கலையுலக மன்னர்கள் முதல், கலையுலகிலிருந்து அரசியலுக்குள் நுழைந்த ஜாம்பவான்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோர் வரை இடம் பிடிக்கின்றனர். ஒருசில தொழிலதிபர்களும் உண்டு. இவர்களுடன் ஏற்பட்ட தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பி.ஆர்.துரை.

முதலில் மேடையில் இளம் நடிகனாக, பி.ஆர்.துரை தோன்றிய நாடகம் மு.கருணாநிதியின் எழுத்தில் உருவான 'முதல் முத்தம்' என்றால் வியந்து போவீர்கள். பதினைந்து வயதுகூட நிரம்பாத இளைஞனாய் சென்னை வந்து எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவில் சேர்ந்து 'சேவா ஸ்டேஜ் துரை' என்றே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்த ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் முன்பாக அந்த அடையாளத்தை வெளிப்படுத்தியபோது, அந்த மாமனிதரையே சற்று வியப்படைய வைத்தார்.

'வியட்நாம் வீடு' திரைப்படமானபோது முக்கிய கதாபாத்திரமான சிவாஜியின் மனைவி கதாபாத்திரம் கைநழுவிப் போன வருத்தத்தில் சிவாஜி குழுவிலிருந்து பிரிந்து வந்த ஜி.சகுந்தலா புதிய குழுவைத் தொடங்கியதும், அதற்கு முதல் நாடகத்தை எழுதித் தந்தவர் தமிழக முதல்வராகிவிட்ட கருணாநிதி! அதில் பி.ஆர்.துரை இளம் துணை இயக்குநராய் பணியாற்றினார்.

நாகேஷின் கலைவாழ்க்கை தொடக்க காலத்தில் ஒரு நாள் மிகுந்த பசியோடு நண்பனும் கவிஞனுமான வாலியோடு துரையின் அண்ணனைக் காண வந்த காட்சியை துரை வர்ணிப்பது நெகிழ்ச்சியூட்டுகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல பிரபலங்களுடன் ஏற்பட்ட பிரமிப்பூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பி.ஆர்.துரை.

தெளிவான விறுவிறுப்பான நடையில் அந்த நபர்கள் வாழ்ந்த காலத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறார். இதனைப் படிக்கும் கலைத் துறையினர் மட்டுமல்லாமல், தமிழ் வாசகர்கள் அனைவருமே அந்தக் கால அனுபவங்களில் தங்களை ஆழ்த்திக் கொள்ளலாம்.

You may also like

Recently viewed