Description
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தேசத்தின் ஆன்மா. நூலாசிரியர் வேலூர் எம். இப்ராஹிம் அந்த ஆன்மாவின் குரலை அழகு தமிழில் இந்த நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாஜகவின் மேடைகளில் ஏறி நின்றுகொண்டு நபிகள் பெருமானின் போதனைகளை முழங்குகிறார். பாஜகவினர் செய்யும் தவறுகளைப் பண்புடன் கண்டிக்கிறார். அயோத்தியில் ராமர் ஆலயம்தான் கட்டப்படவேண்டும் என்பதை நபிகளின் அருளுரைகளைக் கொண்டே எடுத்துச்சொல்கிறார்.
சமஸ்கிருதம் எப்படி மதம் கடந்து இந்த தேசத்தின் செம்மொழியாகத் திகழ்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்திருக்கிறார். இந்துக்களின் மனம் புண்படுமென்றால் பசுமாமிசத்தை குர்பான் கொடுக்கவேண்டாம் என்று சொன்ன பஹதூர்ஷாவின் மத நல்லிணக்க உணர்வை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இஸ்லாமிய சமூகத்தைத் தவறாக வழி நடத்தும் இஸ்லாமிய தலைவர்கள், அமைப்புகளை வெளிப்படையாகப் பெயர் சொல்லி கடுமையாக விமர்சிக்கிறார். ஈவெராவுக்கும் கடுமையான மறுப்புகள் உள்ளன.
பொதுவெளியில் பேசப்படாத, அதேநேரம் கட்டாயமாகப் பேசப்பட்டிருக்கவேண்டிய முக்கியமான கருத்துகளைக் கொண்ட இந்தப் புத்தகம் தமிழ்சமூகத்தின் அனைவருடைய கைகளையும் சென்று சேரவேண்டும்.
***
எம்.சையத் இப்ராஹிம் (எ) வேலூர் இப்ராஹிம், சென்னையில் பிறந்தவர். பி.ஏ., எல்.எல்.பி பயின்றவர். மக்கா, மதினா செல்லும் புனித யாத்திரிகர்களின் வழிகாட்டுதல் மையமொன்றை நடத்திவருகிறார். ஓர் அரசியல் ஆய்வாளராகத் தொடர்ந்து நடப்பு அரசியல் விவகாரங்களில் ஆர்வம் செலுத்தி வருபவர். தமிழ் நாடு ஏகத்துவ ஜமாத் என்ற அமைப்பின் தலைவர், எழுத்தாளர், அனுபவமிக்க மேடைப் பேச்சாளர். நபிகளாரின் அருளுரைகளை இன்றைய அரசியல் சூழலோடு தக்கமுறையில் இணைத்து விவாதிக்கும் ஆற்றல் கொண்டவர். மத நல்லிணக்கமும் தேசபக்தியும் இவருடைய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் தீர்மானிக்கும் ஆதாரச் சக்திகளாகத் திகழ்கின்றன. இது அவருடைய முதல் நூல்.