Description
இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், நபிமார்கள் வரலாறு, வலிமார்கள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதிய எம்.ஆர்.எம். அப்துற்-றஹீமின் படைப்புகள் தொடர்பாக ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட 45 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அப்துற் றஹீம் தனது நூல்களில் பதிவு செய்துள்ளபடி, ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள், மாற்றங்களை ஆய்வு செய்யும் 'மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்' என்ற கட்டுரை லிங்கனின் வாழ்க்கை வரலாற்றையே முழுமையாக விவரிக்கிறது.
'அப்துற் றஹீம் 28 தன்னம்பிக்கை நூல்களை எழுதியிருப்பதும், அந்த நூல்களை வாசித்து தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து முன்னேற்றம் கண்டவர்கள் ஏராளம்' என்ற தகவல் அந்த நூல்களை முழுமையாக வாசிக்கத் தூண்டுகிறது.
வெறுமனே போதனைகளாக இன்றி வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் பாணியில் எழுதப்பட்டிருப்பது தனிச் சிறப்பானது எனவும், நூல்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பழமொழிகளைப் பொருத்தமாக சேர்த்திருப்பது புதிய வாசிப்பனுபவத்தைத் தருவதாகவும் சொல்கிறது ஒரு கட்டுரை.
'மகனே கேள்' என்ற தன் நூலில் சகோதர உள்ளம் குறித்துப் பேசும்போது பிற சமய நூலான கம்ப ராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டும் அவரது பாங்கு அவரின் இலக்கிய உள்ளத்தையும் இளகிய மனதையும், மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றுவதாக புகழாரம் சூட்டுகிறது ஓர் ஆய்வுக் கட்டுரை.
மொத்தத்தில் அப்துற் ரஹீமின் படைப்புகளை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வகையில் சிறப்பாக தொகுக்கப்பட்ட நூல்.