Description
ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய நூல். ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் எவ்வாறு செயல்படுகின்றன? செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பு? அதற்கான விதிமுறைகள் எவை? ஒரு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு செலவழிக்க வேண்டும்? என்பன போன்ற பல விவரங்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக ஒரு பணிக்கான ஒப்பந்தம் எவ்வாறு போடப்படுகிறது? என்பதை விளக்க அதற்கான தனி பகுதியே உள்ளது. ஒப்பந்தங்களும் ஒப்பந்தத் தொகையைப் பொருத்தும், பணம் வழங்கும் முறையைப் பொருத்தும் பல முறைகளாக உள்ளன. துண்டு வேலை உடன்படிக்கை, பிரிவு வேலை விகிதம் அல்லது தனி வேலை ஒப்பந்தம், விலையிணைந்த சதவீத ஒப்பந்தம், மொத்த தொகை ஒப்பந்தம், தொழிலாளர் ஒப்பந்தம் என ஒப்பந்தங்கள் பல வகைப்படும். இந்த ஒப்பந்தங்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. ஒப்பந்தத்திற்கேற்ப பணிகளைச் சரியாக முடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்த விரிவான பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
அதுபோன்று ஊராட்சி ஒன்றியமோ, மாவட்ட ஊராட்சியோ ஒரு விழா எடுக்க வேண்டும் என்றால், அதற்குரிய செலவு, யார் யார் அழைக்கப்பட வேண்டும், அவர்களுடைய பெயர்கள் அழைப்பிதழில் எந்த முறையில் அச்சிடப்பட வேண்டும் என்பன போன்ற துல்லியமான விதிமுறைகள் இருக்கின்றன.
பெண்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுகிற நிலையில், அவர்களுடைய உறவினர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டால், அதைக் கண்காணிப்பதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் தொடர்பான ஒட்டுமொத்த நடைமுறைகள் குறித்த நமக்குத் தெரியாத பல தகவல்களின் தொகுப்பு இந்நூல்.