சித்தர்கள் பித்தர்களா?


Author: ராஜேஷ்குமார்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 240.00

Description

இது சிலிக்கான் உலகம் சாஃப்ட்வேர்களின் சாம்ராஜ்யம். எங்கும் கம்ப்யூட்டர். எதிலும் கம்ப்யூட்டர். கோயில் வாசலில் பூக்களைக் கட்டிக் கொண்டே ஒரு பெண் செல்போனில் பேசுவதையும், வீட்டு வேலைக்குச் செல்லும் ஒரு பெண் இண்டர்நெட் பற்றி தெரிந்து வைத்து இருப்பதையும் பார்க்க பார்க்க பிரமிப்பு! நினைக்க நினைக்க வியப்பு! இந்த வியப்பும், இந்த பிரமிப்பும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்குமா? என்ற கேள்வி எழுமானால் நம்மில் அனைவரும் சொல்கிற பதில் இருந்திருக்காது என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால், இருந்தது என்பதே உண்மையான பதில்.

விஞ்ஞானத்தை கையில் வைத்துக் கொண்டு அறிவியல் விஞ்ஞானிகள் எப்படி சாகசங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்களோ அதே மாதிரிதான் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் மெய்ஞானத்தை கையில் வைத்துக் கொண்டு வியத்தகு விந்தைகளைப் புரிந்தார்கள். விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டும் ஒன்றுதான். வேறு வேறு அல்ல என்பதும் இப்போது ஐயமற நிரூபணமாகி விட்டது. மனிதன் உயிர் வாழ காற்று அவசியம். அந்தக் காற்றுக்கு விஞ்ஞானம் 'ஆக்ஸிஜன்' என்று பெயரிட்டு அழைக்க மெய்ஞானம் அந்த உயிர் காற்றை பிராணவாயு என்று அழைத்தது அந்த சித்தர் காலத்திலேயே!

இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த விஞ்ஞான விந்தைகளைக் காட்டிலும் சித்தர்கள் காலத்தில் நிகழ்ந்த சித்து வேலைகள் அற்புதமானவை. ஆச்சர்யப்பட்டு மூளையே களைத்துப் போகும் அளவுக்கு வீரியம் மிக்கவை. ஆழ்ந்த ரகசியங்களை அடக்கிக் கொண்டவை.

ஒரு சித்தர் புலியை தன் அருட்பார்வையாலேயே அடக்கி, மண்டியிட வைத்து அதன் மேல் சவாரி செய்து இருக்கிறார். இன்னொருவர் கூழாங் கற்களை தன்னுடைய கையால் தொட்டு நவரத்தினங்களாய் மாற்றி ஜொலிக்க வைத்தவர். இன்னொரு சித்தர் இறந்த உடல்களில் கூடு விட்டு கூடு பாய்ந்து இருக்கிறார். கோரக்க சித்தர் என்பவர் வானவெளியில் பயணம் செய்து சீன நாட்டுக்கு சென்று அங்கே அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். நம் உடம்பை எப்படிப் பேணி காக்க வேண்டும்? நோய் நொடிகளிலிருந்து காத்துக் கொள்வது எப்படி? போன்ற கேள்விகளுக்கு பல சித்தர்கள் பதில்களாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

சித்தர்களுக்கு எப்படி இந்த தெய்வ சக்தி வந்தது?

இயற்கையிலேயே அவர்களிடம் இந்த தெய்வ சக்தி இருந்ததா?

மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே என்றாவது ஒரு நாளாவது தனிமையில் இருக்கும்போது அவர்களுடைய மனதில் கீழ்க் கண்ட கேள்விகள் ஓடியிருக்கும்.

நான் யார்..?

எதற்காக இந்த உலகத்தில் பிறந்தேன்..?

நான் பிறப்பதற்கு காரணம் என் பெற்றோர்தான் என்றாலும் முதன் முதலில் மனிதனைப் படைத்தது யார்?

படைத்தது கடவுள் என்றால் அந்தக் கடவுளைப் படைத்தது யார்..? சரி! நம்மைப் படைத்தது கடவுள் என்றே வைத்துக் கொண்டாலும் அந்தக் கடவுளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?

அந்தக் கடவுள் எங்கே இருக்கிறார்?

நம்மை படைத்துவிட்டு அவர் ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும்?

சரி.. அப்படி ஒளிந்து கொண்டு இருந்தால் அவரைத் தேடிக் கண்டுபிடித்து அடைவது எப்படி...?

இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் எந்த ஒரு சாதாரண மனிதன் மனதிலும் முளைக்கும். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாததால் அவனும் சில நிமிஷ நேரம் வரைக்கும் யோசனை செய்து பார்த்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய் விடுவான்.

ஆனால் சித்தர்கள் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிக்க முயன்று பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டார்கள். அந்த சோதனைகளில் நிறைய உண்மைகளையும் கண்டு பிடித்தார்கள். அந்த உண்மைகளிலேயே மிகப் பெரிய உண்மை எதுவென்றால் நம் மனதிலும், உடம்பிலும் இறைவன் ஒளிந்துள்ளான் என்பதுதான். உடலே கோயில் உள்ளமே இறைவன் என்பதுதான் பல சித்தர்களுடைய கண்டுபிடிப்பாக இருந்தது. அந்தக் கண்டு பிடிப்பை சித்தர்கள் சாதாரண மக்களுக்கு எடுத்துச் சொன்ன போது அது அந்த மக்களுக்குப் புரியவில்லை. அப்படிப் புரியாத காரணத்தினாலேயே சித்தர்களைப் பித்தர்கள் என்று மக்களில் சிலர் அழைக்கவும் முற்பட்டனர். மக்களுக்கு இறைவனை உணர்த்துவதற்காக எத்தனையோ சித்தர்கள் அந்தக் கருத்துக்களை பாடல்களாக எழுதி வைத்துள்ளனர். மனிதர்களுக்கு அதைப் படித்துப் பார்க்கும் பொறுமைதான் இல்லை.

எல்லா சித்தர்களும் ஒரே மாதிரியான சக்தி கொண்டவர்கள் அல்ல. கடுமையான தவம் செய்து அதன் காரணமாக அளப்பரிய சக்தி படைத்த சித்தர்களும் உண்டு. ஓரிரு சித்து வேலைகளில் மட்டுமே திறமை காட்டிய சித்தர்களும் உண்டு.

இந்த நூலில் சித்தர்களா... பித்தர்களா... என்ற கோணத்தில், என்னுடைய பாணியில் எழுதியுள்ளேன்.

- ராஜேஷ் குமார்

You may also like

Recently viewed