Author: புதியமாதவி

Pages: 112

Year: NA

Price:
Sale priceRs. 150.00

Description

உலகம் முழுவதும் ஒற்றைப் பெருந்தொற்றுக்கு ஆளானபோதும் அது சார்ந்த விளைவுகள் மட்டும் அந்தந்த நாட்டின் பண்பாடு, பொருளாதார, சமூக வரலாற்றுக்கு ஏற்றவாறு பன்முகத்தன்மையோடு இருந்தன. இந்தியாவைப் பொறுத்தவரை மதம், சாதி, வர்க்கம், பாலின ஏற்றத்தாழ்வு, சமூக மதிப்பீடுகள் ஆகியவை பெருந்தொற்றின் வலியை இன்னும் அதிகமாக்கியிருக்கின்றன. குறிப்பாக, விளிம்புநிலை மக்களுக்குப் பெருந்தொற்று பெருஞ்சுமை. முரண்பாட்டு முடிச்சுகள் கொண்ட மனித மனம் ஏற்கெனவே சமூகத்தில் இருக்கும் பாகுபாடுகளுடன் கரோனா தீண்டாமையையும் புதிதாகச் சேர்த்துக்கொண்டது. இத்தகைய ஆழமான, அத்தனை எளிதாக மறந்தும் கடந்துவிட முடியாத கரோனா கால அவலங்களைப் புதியமாதவி, தனது ‘சிறகொடிந்த வலசை’ நாவலில் பதிவுசெய்திருக்கிறார்.

ஒருவர் தனது வீட்டுக்குள் விடும் மூச்சுக் காற்று அடுத்த வீட்டுக்குள் உள்ளவர்மீது படும் அளவுக்கான வீடுகள் கொண்ட மும்பையின் தாராவி பகுதியில் ஆரம்பிக்கிறது நாவல். பெருநகரத்தின் ஓட்டத்துக்கு உறுதுணையான உழைப்பாளிகளின் வாழ்க்கையைப் பெருந்தொற்று சூறையாடியதன் கதை. இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களை ஏற்றினால் கரோனா போய்விடும் என்ற மூடநம்பிக்கையை உறவுகளைப் பெருந்தொற்றில் இழந்தவர்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்ற விமர்சனத்தில் தொடங்குகிறது முதல் அத்தியாயம்.

தாராவியில் தன் காதல் கணவனைப் பெருந்தொற்றில் இழந்து, இரு குழந்தைகளுடன் கையறுநிலையில் நிற்கும் ஒரு பெண், ‘வெளிச்சத்தில் இருக்கும் வேறுபாடுகளைப்’ பிள்ளைகளுக்கு எப்படிப் புரியவைப்பாள்? தன் பிள்ளைகளின் நலன் கருதிச் சொந்த ஊருக்குத் திரும்ப நினைக்கும் அவளுக்கு பொருளாதாரரீதியிலான போராட்டம் ஒருபுறமும் பாலியல்ரீதியிலான சுரண்டல்களும் மிகுந்த மனச்சோர்வை அளிக்கின்றன. இடப்பெயர்வில் ஏற்படும் அலைக்கழிப்பில் அவள் உயிர் இழக்கிறாள். தந்தையையும் தாயையும் இழக்கும் குழந்தைகளின் கண்ணீர்த் துளிகள் ரத்தத் துளிகளைப் போல் தோன்றுகின்றன.

பெற்றோரை இழந்து உறவுகளால் வஞ்சிக்கப்படும் குழந்தைகள் அனுபவத்தால் முதிர்ந்தவர்களாகிறார்கள். எது நல்லது, யார் நல்லவர் என்பதையெல்லாம் அவர்களின் அனுபவங்கள் அவர்களுக்கு உணர்த்திவிடுகின்றன. நெருக்கடி நிலை குழந்தைகளையும் பெரியவர்களாக்கிவிடுகிறது என்பதைக் கதை பதிவுசெய்கிறது. பெயர் தெரியாதவர்கள் முகம் தெரியாதவர்கள் துன்பத்தில் கரம் நீட்டுகிறார்கள். உறவுகள் வஞ்சிக்கிறார்கள். வெளிச்சத்தின் வேறுபாடுகளைக் குழந்தைகளுக்கு உணர்த்தியிருக்கிறது பெருந்தொற்று.

இழப்பின் வலி உணர்ந்த குழந்தைகளிடமிருந்து நம்பிக்கை துளிர்க்கிறது. 2020 மார்ச் முதல் இன்று வரை பெருந்தொற்றுக் காலத்தில் மனிதர்கள் எதிர்கொண்ட அலைவுழல்வு, உறவுகளை இழத்தல், கையறுநிலை, மனித மனங்களின் இருண்ட பக்கங்கள், அரசு அளித்த குறைந்தபட்ச நிவாரண உதவியை வைத்தே வாழ்க்கையை ஓட்டிய குடும்பங்கள், வளரிளம் பருவத்தினரின் கல்வி, தொழில்நுட்பம் அவர்களுடைய நடத்தையில் ஏற்படுத்திய தாக்கம், சாதிப் பாகுபாடுகள், பாலினப் பாகுபாடுகள் என எல்லாவற்றையும் பதிவுசெய்திருக்கிறார் புதியமாதவி.

You may also like

Recently viewed