Description
தமிழரின் மிகத் தொன்மையான இலக்கியமாகத் திகழும் சங்க இலக்கியப் பிரதிகள் முதல், இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான அடையாளமாகத் திகழும் இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் வரைக்குமான புலமைத்துவ உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்துகின்ற தெ. வெற்றிச்செல்வனின் ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ நூல் தமிழியல் ஆய்வுப் புலத்தில் விரிவாகப் பேசப்படவேண்டிய பல விவாதப் புள்ளிகளைத் தொட்டிருக்கிறது.
“பழமைப் பிடிப்பும், கெட்டித் தட்டிப் போன சுயமோகிப்பும், பட்டிமன்ற அரைவேக்காட்டுத்தனங்களும், தட்டையான ஆய்வுப் புளகாங்கிதங்களும் ஆழங்கால் பட்ட அறியாமைகளும் தமிழாய்வில் மிகப்பெரிய மந்த கதியை உருவாக்கியுள்ளன. மேற்கோள் திரட்டியாகவும். சிறுபிள்ளைத்தனங்களாகவும் தமிழாய்வு சவளைப்பிள்ளை என இளைத்துக் கிடப்பதைத் தட்டி எழுப்பி, ரத்தசோகை போக்கிப் புத்துயிர்க்கச் செய்ய வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது, தமிழியலைச் சிறுமைப் படுத்திவிடும், அவலத்துக்கும் அபாயத்துக்கும் உள்ளாகிவிடும்”, என்று முதல் கட்டுரையிலேயே பதிவு செய்வது, இந்த நூலின் வாசிப்பையும் அதன் உரையாடல் தளங்களையும் மிக நுணுக்கமாகப் பார்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.