Description
தமிழில் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, வீரமாமுனிவரின் சதுரகராதி எனத் தொடர்ச்சியாக இதுவரை எண்ணற்ற அகராதிகள் வெளிவந்திருக்கின்றன.
பின்னர், தமிழகத்திலேயே சில குறிப்பிட்ட வட்டாரங்களுக்கே உரியதான வழக்குச் சொல் அகராதிகளும் வரத் தொடங்கின. இவற்றைத் தொகுப்பது என்பதே பெரும் உழைப்பையும் நேரத்தையும் வேண்டுகிற மிகுந்த அக்கறையுடன் கூடிய பணி.
தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி என்ற இந்த நூலில் நாஞ்சில் நாடு, நெல்லை, செட்டிநாடு, நடுநாடு, தஞ்சை, கொங்கு, மதுரை, முகவை, பரதவர் பகுதிகள், நீலகிரி, பழங்குடிகள், இலங்கை எனத் தமிழர் வாழுமிடங்களைச் சார்ந்த நாட்டுப்புறவியல் சொற்களைத் தொகுத்துள்ளார் சு. சண்முகசுந்தரம்.
இந்த அகராதியில் வட்டாரங்களைத் தாண்டிய பல பகுதிகளிலும் புழங்கும் வழக்காற்றுச் சொற்களும் நாட்டுப்புறவியல் கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
காதணி என்ற ஒற்றைச் சொல்லுக்குத் தமிழில்தான் எத்தனை சொற்கள்? பூடி, குருந்தட்டு, முருகு, காதோலை, கடுக்கண், கம்மல், அலுக்கு, ஒன்னப்பு, முக்கட்டு, மாட்டி, குணுக்கு, தண்டட்டி, மேலிரு, பாம்படம்... இன்னும் தேடத் தேட ஊர்ப்பக்கத்தில் நிறைய சொற்கள் கிடைத்துக்கொண்டுதானிருக்கும் போல.
தமிழகத்தில் பரவலாகப் புழங்கும் சொற்கள் அல்லாமல் குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கும் (தாராபிஷேகம் போன்ற) சொற்கள் அனைத்துக்குமே ஏதேனும் குறிப்பு கொடுத்திருக்கலாம்.
அகராதியைப் புரட்டும்போதே தமிழில் இப்படியும் சொற்கள் இருக்கின்றனவா என்று வியப்பூட்டுவதாக இருக்கின்றன பல சொற்கள். தமிழின் அருஞ்சிறப்புகளிலொன்றை அறிவதற்கான திறப்பு இந்த நூல்.