Description
தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை புராண விளக்கங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல்.
தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் உற்பத்தி குறித்து மிக விரிவாக பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாது அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலான அணைகள், சிற்றாறுகள், கால்வாய்கள், கோயில்கள், மூலிகைகள் உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவருக்கு எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. இந்த தர்காவை கட்டியவர்யாதவ குலத்தை சேர்ந்த பிச்சையா கோனார். மறவர், யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உமறுப்புலவரின் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர்.
ஆங்கிலேயரிடம் தபேதாராகப் பணியாற்றிய சுலோச்சனா முதலியார், லண்டனில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு கிடைத்த பரிசுத் தொகையை வைத்து திருநெல்வேலியையும் கொக்கிரகுளத்தையும் இணைக்கும் ஆற்றுப்பாலத்தை கட்டினார்.
பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள கிளாரிந்தா சர்ச்சுக்குள் வீரவாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற ஆஷ் துரையின் கல்லறை உள்ளது. அவருடைய மனைவி, மகளின் கல்லறையும் அதே இடத்தில்தான் உள்ளன. இவர்களின் நினைவு நாளில் இங்கிலாந்திலிருந்து அவரது உறவினர்கள் நெல்லைக்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் பாளையங்கோட்டைக்கு வந்த பிறகு நெல்லையப்பர் கோயிலை மையப்படுத்தி இந்துக்களும், மேலப்பாளையத்தை சுற்றி இஸ்லாமியர்களும், ஊசி கோபுரத்தை மையமாக வைத்து கிறிஸ்தவர்களும் வாழ ஆரம்பித்தனர்.
நெல்லை மாவட்டத்தை குறுக்கு நெடுக்காக ஆழமாக ஊடுருவியும், அகலமாக விரித்தும் மிகச்சிறப்பாக பதிவு செய்திருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்.