Description
முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூர், கலை, பண்பாடு, கலாசாரத்தை நல்வகை பேணும் நான்மாடக் கூடல் நகர், தூங்கா நகரம் என இத்தனை சிறப்புப் பெற்ற நகரம் மதுரை. பழைமையான கோயில்களிலும் கட்டடங்களிலும் கோட்டைகளிலும் தன் பழம்பெருமைகளைக் கட்டிக்காத்து வரும் பெருமைமிக்க ஊர் மதுரை. பாண்டியர்கள் முதல் நாயக்கர்கள் வரை பல்வேறு ஆளுகைகளின் கீழிருந்த மதுரை மாநகரைச் சுற்றிலும் வரலாற்றின் எச்சங்கள் எங்கெங்கும் காணக்கிடைக்கின்றன. அதன் வீதிகள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இப்படிப் பல பெருமைகள் கொண்ட மதுரையைப் பற்றிய வரலாறு, நிகழ்காலத் தகவல்களைக் கொண்டு விகடன்.காம்-ல் வெளியான கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்த நூல். தொழிலாளர்களுக்கென தனியே ரயிலை இயக்கிய மதுரா கோட்ஸ் ஆலை, முதன்முதலில் ரயிலைக் கண்ட மதுரை மக்களின் மனநிலை, மருதநாயகம் கான் சாகிப் ஆன பிறகு மதுரை கவர்னராக இருந்து மதுரை மக்களுக்குச் செய்த பணிகள், வெளிநாட்டினர் ஏன் மதுரை மாநகரை அதிகம் நேசிக்கிறார்கள்... இதுபோன்ற பழம்பெரும் மதுரை பற்றிய வரலாற்றுப் பக்கங்களைக் காட்டுகிறார் நூலாசிரியர். தொல்மதுரையைக் காணத் தொடங்குங்கள்...