Description
1. ப்ளீஸ் கம் பேக் மிஸ்டர் ஆண்டர்சன் - நவீன உலகில் நடந்த மிக மோசமான விபத்து போபால் விபத்து. ஒருவகையில் அது திட்டமிட்ட படுகொலை கூட. பல அப்பாவிகளின் உயிர் இழப்பு எனும் பெரும் சோகம் ஒருபக்கமென்றால், அந்த கோர விபத்தில் உயிர் தப்பியவர்கள் அனுபவிக்க நேர்ந்த வேதனைகள் அதைவிட அதிகம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருமே தப்பித்த கொடூரமும் அரசியல் சக்திகளின் நயவஞ்சகமும் உலகில் எங்குமே பார்க்க முடியாத துயரம். அந்த வேதனையை அவல நகைச்சுவை பாணியில் சொல்கிறது இந்த நாடகம்.
2. யார் கொன்றது? - பள்ளி வாகனமொன்றில் சென்ற குழந்தை விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறது. அலட்சியமாக இருந்த டிரைவர், பள்ளி நிர்வாகம், பள்ளி வாகனக் கண்காணிப்பாளர், கல்வி அமைச்சர், பெற்றோர் என ஒவ்வொரிடமும் குழந்தையின் ஆன்மா நியாயம் கேட்கிறது.
3. யார் உயர்ந்தவர்? - பிராமணக் குடும்பத்தில் சிறு வயதில் விதவையாகும் பெண், இடையர் குடும்பத்தில் கணவரை இழக்கும் பெண் - இந்த துயரமான நிகழ்வை இரு குலங்களும் எப்படி எதிர்கொள்கின்றன என்ற அடிப்படையில் இந்த நாடகம் எழுதப்பட்டுள்ளது.
4. ஸ்வாமி அம்பேத்கர் சரிதம் - டாக்டர் அம்பேத்கர் ஒருவேளை அரசியல் பாதைக்குப் பதிலாக ஆன்மிக வழியில் சமூக விடுதலைக்குப் பாடுபட்டிருந்தால் என்ன செய்திருப்பார் என்ற கற்பனையின் அடிப்படையில் எழுதப்பட்டது.
5. விவசாயிகள் சங்கத் தலைவரின் விசேஷப் பேட்டி - அரசியல் கட்சிகளின் தூண்டுதலினால் பொய் வேடம் புனைந்த விவசாயிகள் சங்கத் தலைவரை, உண்மை கண்டறியும் சோதனை போன்ற முறையில் மயக்கிப் பேட்டி எடுத்தால் என்னென்ன உண்மைகளைச் சொல்வார் என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் இது.
6. திருவள்ளுவர் ஜெயந்தி - மகாபலிச் சக்கரவர்த்தி திருவோண நன்னாளில் பூமிக்கு வருவதுபோல் திருவள்ளுவர் அவரது பிறந்தநாளான வைகாசி அனுஷ தினத்தில் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்டது இந்த நாடகம்.