Description
26 சிறுகதைகளைக் கொண்டிருக்கும் இந்த நூல், வாசிப்பு தளத்துக்குள் எளிதில் இழுத்துச் செல்லும் எழுத்து நடையில் அமைந்துள்ளது.
அரபு மக்களின் பண்பாடு, துயர், வடுக்கள், உளவியலை தமிழ் வாசகனின் பார்வைக்கு வைத்திருக்கிறார் ஜாகீர் ஹூசைன். ரொட்டிப் பொடிக் கடை என்ற சிறுகதையில் ஒரு பாலஸ்தீன அகதியின் அகப் போராட்டம் விவரிக்கப்பட்டுள்ளது. அகதிகள் முகாமின் அனுதினப் போராட்டங்களை சிறுகதையினூடே விவரிக்கும் நூலாசிரியர், அவர்கள் எதிர்கொள்ளும் ஏமாற்றங்களையும், சலுகைகளையும் ஒருசேர வாசகனிடம் கடத்துகிறார். சுமக்க அனுமதிக்கப்பட்ட ஒரே ஆயுதம் கல்வி மட்டும்தான் என்று அக்கதையில் வரும் ஒற்றை வரியில் அவர்களது ஒட்டுமொத்த வலியையும் வாசகர்களிடம் தாரை வார்க்கிறார் அவர்.
நினைவுகளின் வீடு என்ற சிறுகதை, கணவனை இழந்த ஒரு பெண், மனைவியை இழந்த ஆணின் உளவியல் பிரச்னைகளையும், சமூக நிர்பந்தத்தால் திருமண பந்தத்தில் இணையும் அவ்விருவரும் பழைய நினைவுகளுடன் வாழ்வதையே மகிழ்ச்சியாக எண்ணி ஒருமித்து பிரிந்து செல்கின்றனர். தனி மனிதனின் வாழ்க்கையை இந்த சமுதாய சந்தர்ப்பவாதங்கள் கட்டமைத்தாலும், அதைத் தாண்டி உணர்வுகளே வெற்றி பெறும் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்.
இப்படியாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக "என் வயதுகள்', "சவ ஒப்பந்தக்காரன்', "மகிழ்ச்சி', "கிறுக்கி', "மனைவியும், மகளும்' ஆகிய சிறுகதைகள் வாசகனின் மனதுடன் சிநேகிதம் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
அரபு மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள இத்தகைய நூல்கள் தமிழில் அதிகம் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறது இந்த நூல்.