Description
அமீபா முதல் மனிதர் வரையிலான அனைத்து உயிரினங்களும் இரட்டை உடல்களுடன் வாழ்கின்றன. ஓர் உடல் ஹார்ட்டுவேர் மற்றது சாஃப்ட்வேர். இதை நமது சாஸ்திரங்கள் முறையே தூல உடல், சூக்கும உடல் என்று விளக்கும்.
தூலமும் சூக்குமமும் ஒன்றுடன் ஒன்று நீரும் உப்பும்போலக் கலந்திருப்பதால் நமக்கு அவை இரட்டையாகத் தெரியாமல் ஒற்றையாகவே தெரிகிறது.
இரட்டை உடல்வாசிகள் நாம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று என்னை நானே பல முறை கேட்டதுண்டு. முதல் கேள்வி, இரண்டு உடல்களுக்கு அவசியம் என்ன? அடுத்தது: அதை எப்படி அறிவது? இதைத்தான் ஓர் உயிரியல் ஆராய்ச்சியாளனாக நான் பல ஆண்டுகளாகச் சிந்தித்து வந்திருக்கிறேன்.
ஆழ்ந்த உறக்கத்தில் நம்மிடம் புலன் உணர்ச்சிகளும் மன உணர்ச்சிகளும் எண்ணங்களும் இல்லை. கோமா எனும் நனவற்ற உறக்கத்தில் கிடப்பவர்கள் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறார்கள்? அவர்களது புலன்களும் மனமும் என்ன செய்துகொண்டிருக்கும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைத்தபோது அதை என் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. உலக மக்களுக்கும் சொல்லவேண்டும் என்கிற பொறுப்புணர்வும் இருந்தது. அதனால்தான் இந்தப் புத்தகம். இந்நூலைப் படித்ததும் பலருக்குப் புதிராக இருந்தவை புரிந்துவிடும், பலருக்குப் புதிய புதிர்கள் எழுந்து தூக்கத்தைக் கெடுக்கும். தொடர்ந்து நான் உங்களுடன் இதுபற்றிப் பேசுவேன். இது தொடக்கமே!