Description
வேளாண்மை என்பது உணவுத் தேவை சார்ந்த உற்பத்தி நடவடிக்கை மட்டுமல்ல; சமூக இயக்கத்தின் உயிர்நாடியாகவும் எல்லாக் காலத்திலும் நிலவிவரும் அடிக்கட்டுமானமும் ஆகும். உற்பத்தி சார்ந்த இத்தகைய அடிக்கட்டுமானம்தான் சமூகம், வாழ்க்கை முறை, அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம், பண்பாட்டுப் பெறுமானங்கள் வரையிலுமாக அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் ஆகப் பெரும் சிந்தனைவெளியை உள்ளீடாகக் கொண்டிருக்கிறது.
மூவேந்தர் காலம் தொடங்கி, பல அந்நியப் பேரரசுகள் தமிழகத்தில் காலூன்றியபோதும் அறுபடாத கண்ணியாக, அரசியலையும் பொருளாதாரத்தையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தியாக வேளாண்மை உற்பத்திதான் இருந்திருக்கிறது. இங்கு நிலைகொண்டிருந்த ஆங்கிலேய காலனியத்தின் நவீன சமூதாய உருவாக்கத்திலும்கூட வேளாண்மையும் அதுசார்ந்த உற்பத்தியுமே மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, பல்வேறு ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டினாலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப்பங்கீட்டுக் கொள்கைகள், அணைத் திட்டங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள், நகர மற்றும் தொழில் துறை விரிவாக்கத் தேவைக்கென வேளாண் நிலங்கள் அழிப்பு, குறைவான மற்றும் காலம் தவறிய மழைப்பொழிவுகள், வேளாண் இடுபொருட்கள் விலையேற்றம், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைவான கொள்முதல் விலை, அரசு மற்றும் பொதுச் சமூகத்தின் பாராமுகம் எனப் பல்வேறு காரணிகளால் வேளாண் தொழில் வீழ்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. இதிலுள்ள அபாயத்தைத் தமிழ்ச் சமூகம் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஒட்டுமொத்தப் பொதுச் சமூகத்துக்கும் அடிப்படைத் தேவையாக அமைந்திருக்கும் வேளாண்மையும், வேளாண் மக்களும் பல்வேறு காரணிகளால் பல்வேறு காலகட்டங்களிலும் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. இன்றும்கூட அந்த நெருக்கடி தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும், அதுபற்றிய உரையாடல்களை, ஆய்வுகளை மையப்படுத்திய ஓர் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் இன்னும் உருவாக்கப்படவில்லை. வீழ்ச்சியில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் காத்திரமான உரையாடல்களையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டியது சமகாலத் தேவையாகும்.
தமிழ்ச் சூழலில், வேளாண்மையையும் அது சார்ந்த மக்களின் பண்பாட்டு வெளியையும் கோட்பாட்டு வெளிச்சத்தில் வாசிக்கும் முறையானது கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, நா.வானமாமலை, கோ.கேசவன், ஆ.சிவசுப்பிரமணியன், பெ.மாதையன், ராஜ்கௌதமன், டி.தருமராஜ், தே.ஞானசேகரன் போன்ற ஆய்வாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், வேளாண்மை சார்ந்தும், வேளாண் மக்கள் சார்ந்ததுமான கோட்பாட்டு ஆய்வுகளாக - முழுமையான ஆய்வுகளாகத் தொடர்ச்சியாக அவை முன்னெடுக்கப்படவில்லை.
நிலம், நீர், விதைகள், உற்பத்தி, மனிதர் உள்ளிட்ட பல்லுயிர் வாழ்வு எனப் பரந்துபட்டிருக்கும் வேளாண் தொழில் மரபுகளைக் குறித்தும், வேளாண் மக்களின் தொழில் முறைகள், தொழிலோடு இணைந்து வெளிப்படும் வழக்காறுகள், வாழ்க்கை முறையோடு பிணைந்திருக்கும் பண்பாட்டு வரலாறு என அனைத்தையும் இணைத்து உரையாடும்போது, அதன் போக்கில் ஓர் கோட்பாடாக வடிவமையும் வாய்ப்புகள் நேரும். அவ்வகையில், ‘வேளாண் மக்களியம்’ (Agrarianism) என்ற அளவில் பரந்துபட்ட கோட்பாட்டை அது உள்ளீடாகக் கொண்டிருப்பதையும் கண்டறிய முடியும். இந்நிலையில், மகாராசன் எழுதிய ‘வேளாண் மரபின் தமிழ் அடையாளம்’ நூல் மிகுந்த கவனம்பெற வேண்டிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
மனித சமூகத்தின் ஆதிகாலம் தொடங்கி, சமகாலம் வரைக்குமான காலவெளியினூடாகப் பரிணமித்திருக்கும் வேளாண் மரபுகளையும், அவை சந்திக்கும் பிரச்சினைகளையும் மிக விரிவாக ஆராய்ந்திருப்பதோடு, நிலத்தோடு தொடர்புடைய வேளாண் மக்களின் பண்பாட்டு மரபுகளையும் விரிவாக ஆராய்ந்து, சமூகப் பண்பாட்டு வரைவியலாகவும் முன்வைத்திருக்கிறது இந்நூல்.
நூலின் முதல் இயலானது, உழவுத் தொழில் மரபின் பண்பாட்டு வரைவியலையும், வேளாண் மரபினரின் சமூக வரைவியலையும் மானுடவியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, வழக்காறு, சடங்கு, வாழ்வியல், வழிபாடு, பண்பாட்டு நடத்தை எனப் பல்வேறுபட்ட பன்முகத் தரவுகளோடு மிக விரிவாகப் பேசுகிறது. இரண்டாவது இயலானது, வேளாண்மைக்கு அடிப்படை வித்துகளுள் ஒன்றான நீர் அறுவடைப் பண்பாடு பற்றியதாகும். அதாவது, நீர் மேலாண்மை குறித்து மிக நுணுக்கமான பண்பாட்டு வரைவியலை அவ்வியல் முன்வைக்கிறது.
வேளாண்மைத் தொழில் மரபு, நீர் மேலாண்மை மரபு, அவ்விரண்டையும் மேற்கொண்டிருந்த வேளாண் மக்களின் பண்பாட்டு மரபு என, இம்மூன்றைக் குறித்தும் மிக ஆழமாக விவரித்திருக்கும் இந்நூலானது, ‘வேளாண் மக்களியம்' எனும் கோட்பாட்டு வரைவியலைப் பல்வேறுபட்ட புதிய தரவுகளோடு முன்வைக்க முனைந்திருக்கிறது.