Description
பெர்னியரின் பயணக்குறிப்புகளை வாசிக்கும்போது ஒரு நாவலை படிக்கும் எண்ணமே உருவாகிறது. மொகலாய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களின் மாறுபட்ட எண்ணப்போக்குகள், அச்சங்கள், பழிதூற்றல்கள், கொலைகள், தியாகங்கள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் முன்வைக்கின்றன இக்குறிப்புகள்.மொகலாயர் ஆட்சி இந்த மண்ணில் புரண்டெழுந்த பேரலை. வரலாற்றின் ஒரு பக்கம். ஒருவரை ஒருவர் தாக்கியும் தோற்கடித்தும் கொன்றும் பழிவாங்கி வீழ்த்தியும் ஆட்சியும் அதிகாரமும் கைமாறிக்கொண்டே செல்லக் காரணமாக இருக்கிறார்கள்.நூல்முழுதும் ஏராளமான அளவில் நேரிடையான தகவல்கள். உணர்ச்சிமிகுந்த சித்தரிப்புகள். ஒவ்வொரு கணமும் அவர் மனிதர்களையும் வாழ்க்கையையும் உற்றுப் பார்த்தபடியே இருக்கிறார்.மொகலாய மன்னர்களின் உறவுச்சிக்கல்களையும் விசித்திரப்போக்குகளையும் பெர்னியர் தொகுத்துக்கொண்டே போகிறார். ஒரு கட்டத்தில் மனமுதிர்ச்சி உள்ள ஒருவர் வாழ்க்கைச் சம்பவங்களை முன்வைத்து இந்த வாழ்வின் பொருளை மதிப்பிடும் முயற்சியாக மாறிவிடுகிறது. எழுத்தின் வழியாக நிகழ்ந்திருக்கும் இந்த வேதியல் மாற்றமே பெர்னியரின் பயணக்குறிப்புகளுக்குக் கிடைத்துள்ள வெற்றி.