Description
‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்கிறது. அவரது கதைகள் ஒரு புதிர் விளையாட்டின் சூழ்ச்சி. அது வாசகனை சிலந்தி வலையினைப்போல கவ்விப் பிடிக்கிறது. பிறகு வேறொன்றாக உருமாற்றுகிறது. அவரது கதைகளுக்குள் செயல்படும் காலம் என்பது சமூகத்தினாலோ வரலாற்றினாலோ உருவாக்கப்படுவதில்லை. அது மனித மனதின் அமரத்துவம் வாய்ந்த கடக்க முடியாத தரிசனங்களாலும் தவிப்புகளாலும் பின்னப்படுகிறது. நவீன தமிழ் புனைகதை மொழியின் மகத்தான வெளிப்பாடாக லா.ச.ரா.வின் படைப்புகள் திகழ்கின்றன. நான்கு தொகுதிகளைக் கொண்ட அவரது சிறுகதைகள் வரிசையில் முதலாவது தொகுதியான இந்நூலில் அவரது 36 கதைகள் இடம்பெறுகின்றன.