Description
பட்டாம்பூச்சியின் மற்றொரு பெயர்: சுதந்திர தாகம். மார்பிலே ஒரு பெரிய பட்டாம்பூச்சியின் படத்தைப் பச்சைகுத்திக் கொண்டிருந்ததால் அதையே பெயராகப் பெற்றவன் ஃபிரெஞ்சுக்காரனான ஹென்றி ஷாரியர்.
இருபத்தைந்து வயது இளைஞனாக இருந்த சமயம் அவன் (செய்யாத) ஒரு கொலைக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்று, அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, ஃபிரெஞ்சு கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டான்.கடலிலே கட்டுமரம் செலுத்தித் தப்பி ஓட அவன் திரும்பத் திரும்ப முயற்சிகள் செய்து, திரும்பத் திரும்பப் பிடிபட்டு, கடைசியில் சுதந்திர மனிதனாக ஆனான்.
மனிதாபிமானமும், காதலும், நகைச்சுவையும், கோபாவேசமும், திகிலும், நட்பும், கொடுமையும் நிறைந்த அவனுடைய போராட்ட வரலாறுதான் பட்டாம்பூச்சி. உலக இலக்கியத்தின் தலைசிறந்த விடுதலைக் காவியங்களில் ஒன்று.