Description
நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமாகவே நடைபெறும். இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கவேண்டிய அவசியமும், ஓரளவு சீராக நடைபெற்று வரும் கட்சி விவகாரங்களைக் கவனிப்பதற்கு குளிர்கால மாதங்களை, குறிப்பாக, ஆண்டின் முதல் மூன்று மாதங்களை ஒதுக்கிக் கொள்ளுமாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளன.
பொதுவாக, ஒரு மனிதனின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும் போது, அவனது மூளையின் மெய்னெர்ட் இணைப்பு நரம்புகள் எரிச்சலூட்டக் கூடிய அளவில் மதமதப்புடன் செயல்படுகின்றன. இந்நிலையில், கையாளுவதற்குக் கடினமான மெய்யியல் சிக்கல்களில் அவ்வப்போது ஏற்படும் தடங்கல்களை அவன் முன்போல சுலபமாகவும் துரிதமாகவும் சமாளிப்பதில்லை. ஆகவே, ஒரு குளிர்காலத்தில் முடிக்கப்பட வேண்டிய பணி எதிர்பார்த்தபடி பூர்த்தியாகாவிட்டால், அடுத்த குளிர்காலத்தில் அதே பணியை பெரும்பாலும் புதிதாகத் தொடங்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டது.
மூலதனம் நூலில் மிகமிகக் கடினமான ஐந்தாம் பகுதியைப் பதிப்பிப்பதில் நடந்தது இதுவே!”