Description
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர், சுப்ரமணிய பாரதி தாமே தொடங்கிய பணி, பல இடர்கள் கடந்து தற்காலத்தில் சாத்தியமாகியிருக்கிறது. தமிழ் பதிப்புலகு தன்னுடைய ஆரம்பக் கட்டங்களில் இருந்த காலத்தில் பாரதி தன்னுடைய படைப்புகளை தொகுப்பாக வெளியிட ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான தேவைகளையும், காரணங்களையும் விரிவாகவே அவர் அலசியிருந்தார். ஆனால், அவர் காலத்திற்குள் அது ஈடேறவில்லை.
இந்த நூற்றாண்டு காலக்கட்டத்தில், தமிழ் பதிப்புலகில், பாரதியின் படைப்புகள் முக்கியமான மூன்று நிலைகளை கடந்து வந்திருக்கின்றன. மிகக்குறுகிய வாசிப்பைக் கொண்ட, பத்திரிகை, சஞ்சிகைகளை தாண்டி தமிழில் பெரிய புத்தகங்களைப் பற்றி அறிந்திராத ஒரு காலத்தில் பாரதியின் படைப்புகளை அவருடைய குடும்பத்தினர் தனித் தொகுப்புகளாக கொண்டு வந்தது முதல் நிலை. அப்பொழுதே பாரதியின் படைப்புகளை ஆங்கிலத்திலும் கொண்டு வந்தார்கள். அக்காலத்தில் வெளிவந்த திரிவேணி பத்திரிகையில் அந்நூல் பற்றிய சிறு விமரிசனமும் வந்திருக்கிறது. ஆனால் அது குடத்திலிட்ட தீபம் போல குறுகிய வாசக வீச்சைத்தான் எட்டியிருந்தது.
பின்னர் சினிமா பிரபலமடைந்த காலத்தில், பாரதியின் பாடல்களுக்கு திரை ஊடகத்தில் பெருமதிப்பு உருவானது. அப்போது நிகழந்த காப்புரிமை மோதலின் போது பாரதியின் படைப்புகளை மீட்க குழு அமைத்து போராட்டமெல்லாம் நடந்தேறியது. தமிழக அரசு ஒரு குழு அமைத்து பாரதியின் படைப்புகளை பரவலாக பதிப்பிடத் தொடங்கியது இரண்டாவது நிலை.
உலகெங்கும் வாழும் தமிழ்க்குடியின், பேதமற்ற பெருமையாக, பொதுசொத்தாக, தமிழரை ஒன்றிணைக்கும் சக்தியாக பாரதியின் பாடல்கள் மாறியப் பருவமும் இதுதான். பெருமளவில் பாரதியின் படைப்புகள் பதிப்பிக்கப்பட்டு வந்தன. பாரதி என்பது தமிழினத்தின் தனி அடையாளமாக மாறியது மூன்றாவது நிலை.
இன்றைய வளர்ச்சிமிகு ஊடகப் பெருவெளியில், பாரதியின் பிம்பமும் முழுமையாக விவாதிக்கப்பட, அவருடைய எல்லா படைப்புகளும் தொகுக்கப்பட்டு, முழு பரிமாணத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் நான்காவது நிலையில் இருக்கிறோம். பல்வேறு பண்டித விவாதங்களும், இன்னபிற சொல்லாடுதல்களுக்கும் வழிவகை செய்யும் வகையில், இந்த காலவரிசைப் படுத்தப்பட்டு தொகுப்பு மிகப் பெரும் பங்களிப்பு. இதற்கென அரும்பாடுபட்ட தொகுப்பாசிரியர் திரு சீனி. விசுவநாதன் அவர்களுக்கு வந்தனங்கள். அத்தொகுப்பை வாங்கியதோடல்லாமல், அதற்கு விரிவானதொரு மதிப்புரையை எழுதியிருக்கும் அரவிந்தன் கன்னையனுக்கு மனமார்ந்த நன்றி.