Description
ராஜாஜி அன்றும் இன்றும் வாதப் பிரதிவாதங்களின் மையமாக இருப்பவர். அவரைப் பற்றி நிறைய சர்ச்சைகளும் கடுமையான விமர்சனங்களும் இருக்கின்றன. அதில் எது உண்மை, எது பொய் என அறிந்து கொள்வதற்கு இந்த நூல் உதவும்.
காந்தியின் மகன் தேவதாஸ், ராஜாஜியின் மகள் லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது பிள்ளைதான் ராஜ்மோகன் காந்தி. அந்தவகையில் அவர் ராஜாஜியின் பேரன். தனது தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறோம், எந்த சார்புநிலையும் வந்துவிடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டு, துல்லியமாக நேர்மையாக, ராஜாஜியின் அகபுற உலகின் முக்கிய நிகழ்வுகளை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி எழுதியிருக்கிறார் ராஜ்மோகன் காந்தி.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலை கல்கி ராஜேந்திரன் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ராஜாஜியின் முக்கிய சீடர்களில் ஒருவர் கல்கி என்பதால், கல்கி ராஜேந்திரன் இதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக, தான் செய்ய வேண்டிய முக்கியக் கடமை என்பதைப் போல முழுமையான அக்கறை எடுத்து செழுமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஆயிரம் பக்க நூல் என்றாலும் ஒரு நாவல் படிப்பது போல அத்தனை சுவாரஸ்யமாகவும், வியப்பூட்டும் தகவல்கள், ஆளுமைகள், நிகழ்ச்சிகள் என இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தின் குறுக்குவெட்டு தோற்றம் போல இந்த நூல் அமைந்துள்ளது.