Description
ஸிட்னி ஷெல்டன் எழுதிய மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று லாரா. எப்போதும்போல் இதையும் எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்கள்தான் தேர்ந்தெடுத்து என்னிடம் தந்து மொழி பெயர்க்கும்படி சொன்னார். அவருடைய ஆசியினாலும் வரி காட்டுதலினாலும் இக்கதை வாசகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றது. நல்ல மொழிபெயர்ப்பாளன் என்று எனக்குப் பெயர் வாங்கித் தந்தது.
லாரா தொடர்கதை முடிவிலிருந்த சமயம் நான் எழுதிய நிகழ்ச்சியை இங்கே சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். அது:
லாரா தொடர்கதை வெளியான தினத்தன்று ஆசிரியரவர்கள் என்னைக் கூப்பிட்டு, “நீங்கள் பார்த்தீர்களா?” என்று விளையாட்டுச் செய்திகள் கொண்ட பக்கத்தைப் பிரித்து ஒரு செய்தியைக் காட்டினார்.
‘லாரா - 277’ என்று தலைப்புப் போடப்பட்டிருந்தது. மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் வீரர் லாரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மாட்சில் 277 ரன்கள் குவித்திருந்தார். ‘அங்கே ஒரு லாரா - இங்கே ஒரு லாரா! எப்படி!” - என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஆசிரியர். எங்கள் இருவருக்குமே கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு.
லாரா கதை முடியும் சமயம் அதே லாரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் 375 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்திருக்கிறார்.
ஆசிரியரவர்களின் அறைக்குள்ளே போய், பேப்பரைக் காட்டி, ‘இது எப்படி!’ என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது. அவர்தான் இல்லை. விசேஷம் என்னவென்றால், ப்ரையன் லாரா மேலும் மேலும் கிரிக்கெட் சாதனைகளைப் புரிந்து கொண்டு வருகிறார். இங்கிலாந்தில் ஒரே இன்னிங்ஸில் 501 ரன்கள் எடுத்து, அவர் செய்துள்ள சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.
இந்த நாவலை வாசிக்கப் போகும் எல்லா வாசகர்களும், கற்பனைப் பாத்திரமான லாராவையும் அசல் பாத்திரமான லாராவையும் போல வெற்றிகள் பெற வாழ்த்துகள்.
- ரா. கி. ரங்கராஜன்