Description
பள்ளியில் படிக்கும் போதே, பல ஆசிரியர்கள் "நீ எதிர்காலத்தில் மிக நன்றாக வருவாய் என்று சொன்னது உண்டு. படிப்பில் முன்னணியில் நின்று, எல்லா வகுப்புகளிலும் முதல் ரேங்க் பெற்று, பட்டப் படிப்பிலும் 'ஃபரஸ்ட் க்ளாஸ்' வாங்கினேன். விளையாட்டுக்களிலும் பல மெடல்களைப் பெற்றேன். மிகச் சிறிய வயதிலேயே, நாட்டு நடப்புகளில் ஆர்வம் ஏற்பட்டதால், அப்போதிலிருந்தே உலக அரசியலை ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கினேன். சமூகத்தின் நிலை கண்டு மனம் வெதும்பியதால், இளம் வயதிலேயே, குற்றம் கண்ட இடத்தில் அதைக் கண்டித்துப் போராடும் குணம் வளர்ந்து விட்டது... என்றெல்லாம் எழுத ஆசைதான். என்ன செய்வது? இப்படி ஏதாவது அப்போது நடந்திருந்தால் தானே, இப்போது சொல்வதற்கு? இப்படியெல்லாம் சொல்ல எனக்கு வகையில்லாததால், இந்த கட்டுரைத் தொடர் சுயசரிதையாக அமைந்து விடாது. வாசகர்கள் கவலைப்பட வேண்டாம். சுயசரிதை எழுதுவது என்று நான் தீர்மானித்தால், 'காலையில் எழுந்திருப்பேன்; பல் துலக்குவேன்; காபி சாப்பிடுவேன்; குளிப்பேன்; சாப்பிடுவேன்; பள்ளிக்கூடம் போவேன்; வீட்டுக்கு வருவேன்; தூங்குவேன்' என்ற வகையான திடுக்கிடும் செய்திகளைத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் இந்தக் கட்டுரைத் தொடர் ஒரு சுயசரிதையாக அமையாது.
ஆழ்ந்த படிப்பு, சமூக சேவை செய்யும் மனம்; கடினமான உழைப்பு; என்றெல்லாம் எதுவும் இல்லாததால், இந்தக் கட்டுரை ஒரு சாதனைப் பட்டியலாகவும் உருவாகி விடாது. வாசகர்களுக்கு எந்த பயமும் வேண்டாம்.
பின் இந்தக் கட்டுரைத் தொடரில் என்னதான் இடம் பெரும்? சொல்கிறேன்.