Description
”திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்”-முன்னாள் ராணுவத்தினனான ஹெர்வே ஜான்கர் புதிய தொழிலான பட்டு வியாபாரத்துக்காக பிரான்சிலிருந்து உலகின் கடைசியான ஜப்பானுக்குப் போகிறான். தரமான பட்டுப் புழுக்களைக் கொள்முதல் செய்வது அவன் நோக்கம். அங்கே புதிரான சூழலில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். தொடாமலும் பேசாமலும் அவர்களுக்குள் வளரும் உறவு நாடு திரும்பியும் அவனை வசீகரிக்கிறது. மீண்டும் மீண்டும் கடல் கடந்து செல்கிறான். அவள் ரகசியமாகக் கொடுக்கும் கடிதம் அவனை அலைக்கழிக்கிறது. அது அவனால் வாசிக்க முடியாத மொழியில் எழுதப்பட்டது. வாசிக்க வைத்துத் தெரிந்துகொண்ட பின்பு அதில் மறைந்திருக்கும் மர்மம் அவனை வசியப்படுகிறது. திகைப்படையச் செய்கிறது.-பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் ஓர் உருவகக் கதையாகவும் வரலாற்றுப் புனைவாகவும் காதல் கதையாகவும் காமத்தின் தேடலாகவும் பவுத்த தரிசனமாகவும் வெவ்வேறு வடிவம் கொள்கிறது.-இருபதுக்கும் அதிகமான உலக மொழிகளில் பெயர்க்கப்பட்ட அலெசாண்ட்ரோ பாரிக்கோவின் இத்தாலிய மொழி நாவல் பிரெஞ்சு - கனடிய இயக்குநர் ஃப்ரான்ஸ்வா கியார்த் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.