Description
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்படுகின்றன. அந்த அனுபவங்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறோம். நம்மைப் பற்றிய புரிதல்கள் கொண்டவர்களிடம் அவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது, நமக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது. எழுத்துவண்ணம் மிக்கவர்கள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யும்போது, அவை பலரையும் சென்றடைகின்றன. முகம் தெரியாத வாசகருடன் எழுத்தாளர் நிகழ்த்தும் அந்த உரையாடல் இருவருக்குமிடையே நெருக்கம் அதிகமாகக் காரணமாகிறது. இந்த நூலில், தான் சந்தித்த மனிதர்கள், சந்திக்க எண்ணிய மனிதர்கள், அன்றாடக் காட்சிகள், அந்தக் காட்சிகளைத் தான் கண்ட கோணம் என்று பலதரப்பட்ட சுவாரசிய வண்ணங்களை எழுத்துத் தூரிகையால் காவிய ஓவியமாக்கியிருக்கிறார் நூலாசிரியர் வண்ணதாசன். இதில் கிராமத்தின் எழில்மிகு தோற்றம் அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊன்றிப் படிக்கத் தோன்றும் நெல்லை மண் வாசத்தோடு, எழில் நடையில், கிராமியத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளில் வண்ணதாசனின் வீச்சு யாரையும் கவர்ந்திழுக்கும்.