Description
ஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். காரணம், மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல் துறவி அவர். காமராஜர், தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே, ‘மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைத் துறந்து, கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்’ என்கிற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்கு முன்னுதாரணமாக தானே பதவியிலிருந்து விலகினார்! அவரது செயலைக் கண்ட பிரதமர் நேரு தவித்து, காமராஜரை வழியனுப்ப முடியாமல் நெகிழ்ந்திருக்கிறார்! தன் தங்கையின் பேரன், நல்ல மார்க் எடுத்து மெடிகல் கவுன்சிலுக்குத் தகுதி பெற்றும், அவரை மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைக்காமல், கோவை விவசாயக் கல்லூரிக்குப் போகச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் காமராஜர்! இதுபோன்ற, மனதை ஈர்க்கும் சம்பவங்கள் மக்களைக் கவர்ந்ததாலேயே அவர் ‘பெருந்தலைவர்’ என்று அழைக்கப் பட்டார். கிராமம் தோறும் கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தொழிலாளர் நலனுக்காக தொழிற்பேட்டைகள், விவசாயம் செழிக்க அணைத் திட்டங்கள் போன்ற அரிய செயல்களைச் செய்ததால் ‘கர்மவீரர்’ என்று போற்றப்பட்டார். காமராஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ஆவணங்களின் உதவியுடன் உறுதி செய்துகொண்டு, சுவைபட எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.கே.முருகன். அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் இந்த நூலைப் படித்தால் காமராஜரைப் போல நேர்மையாளராக வாழ வேண்டும் என்ற வைராக்யம் ஏற்படும்.