Description
ஏழை பங்காளன், நாடிவந்தவர்க்கு நன்மைகள் பல செய்தவர், தனது நற்சிந்தனைகளாலும், பழக்கவழக்கங்களாலும் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதைத் திரைப்படங்கள் மூலமும், நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்டிய வள்ளல் என எம்.ஜி.ஆர். என்கிற வார்த்தைக்கான வடிவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர். காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமல்ல... இன்றைய தலைமுறையினர் மனதிலும் அவர் பற்றிய எண்ணங்கள் நிச்சயம் நிழலாடும். சாதாரண மக்களிடமே இப்படி ஒரு பதிவை ஏற்படுத்திச் சென்ற எம்.ஜி.ஆர்., தனது நிழலாக, மெய்க்காப்பாளராக வாழ்ந்த இந்த நூலின் ஆசிரியரான கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களின் மனதில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. எம்.ஜி.ஆருடன் 30 ஆண்டுகள் விசுவாசமாக, பாசப் பிணைப்புடன் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர் திரைத்துறை, அரசியல், சொந்த வாழ்க்கை என பலதரப்பட்ட சம்பவங்களை தன் நினைவுப் பதிவேட்டில் இருந்து இங்கே இறக்கி வைக்கிறார். எம்.ஜி.ஆர். குறித்து இந்த நூலில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் அனைத்துத் தரப்பினருக்கும் வழிகாட்டுபவை என்பதில் ஐயம் இல்லை.