Description
எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக ரசிகர்களின் மனங்களில் கோவிலுக்கு நிகராய் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர்., தன் வாழ்வில் சந்தித்த நெருக்கடிகளும், தோல்விகளும் கொஞ்சநஞ்சமல்ல.. தன் தாயின் அறிவுரைக்குக் கட்டுப்பட்டு சைக்கிள் ஓட்டக்கூடக் கற்றுக் கொள்ளாத எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும் வசீகரிக்கும் சக்தியை எப்படிக் கற்றுக் கொண்டார் என்பது அவரோடு பயணித்தவர்களால் கூட அறிய முடியாத ஆச்சரியம்! எம்.ஜி.ஆரை ஒரு மாபெரும் நடிகராக மட்டுமே மனங்களில் நிறுத்தி வைத்திருப்பவர்கள் எடிட்டிங், திரைக்கதை, ஒளிப்பதிவு, வசனம் என சகல திசையிலும் அவர் சாதனைக் கொடி நாட்டியதை அறிந்தால் ஆச்சரியத்தில் புல்லரித்துப் போய் விடுவார்கள். சினிமா சம்பந்தமான அனைத்து நுணுக்கங்களையும் ஆக்கப்பூர்வமாய்க் கற்றுத் தேர்ந்திருந்த எம்.ஜி.ஆரைப் பற்றி, இந்நூலில் எளிய நடையில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் நூல் ஆசிரியர்.