Description
இன்றைய இந்திய அரசியலை அலசி வரும் இளைய தலைமுறையினர், ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய அரசியல் சூழ்நிலை பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. சுதந்திரப் போராட்ட கால அரசியல் சூழ்நிலையையும், அரசியல்வாதிகளின் போராட்ட வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொள்ள, ஓர் அரசியல்வாதியின் அன்றாட அனுபவங்களே சாட்சியாக இருக்க முடியும். அத்தகைய ஓர் அரசியல்வாதிதான் தீரர் சத்தியமூர்த்தி. காமராஜரின் அரசியல் குருவே சத்தியமூர்த்தி என்பது, அவரின் புகழுக்கு ஒரு மகுடம். சத்தியமூர்த்தி எழுதிய, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் அடங்கிய வரலாற்றுப் பெட்டகம் இந்த நூல். இதில் இடம் பெற்றுள்ள கடிதங்கள், சத்தியமூர்த்தி என்ற தனி மனிதரின் குணநலன்களைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. ராஜாஜி, மகாத்மா காந்தி உள்ளிட்ட பெருந் தலைவர்களுடன் அவர் நிகழ்த்தியிருக்கும் கருத்துப் பரிமாற்றம், ஒப்பற்ற அந்த மனிதரின் நியாயமான கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறது.