Description
இலக்கியம் என்பது என்ன? என்ற கேள்விக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கியவாதிகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். அதில் ஒன்றுதான், வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதும்.ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு, வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, அது எழுதப்பட்ட காலத்துக்கே வாசகர்களை கொண்டுசெல்ல வேண்டும். அந்த வகையில், தன் படைப்புகளின் மூலம் உலக அளவில் இந்திய இலக்கியத்துக்குப் புகழைத் தேடித் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆர்.கே.நாராயண். இவரது நாவல்களில் இந்தியக் கலாசாரம், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், சமுதாயத்தின் நிலை என அனைத்தும் சிறந்த முறையில் ஒருங்கே பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காணலாம்.இவர் எழுதிய தி டார்க் ரூம்! என்ற நாவல் 1938_ல் வெளியிடப்பட்டது. இந்த நாவல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, ஆனந்த விகடன் இதழில் 1940_ம் ஆண்டு, இருட்டு அறை! என்ற பெயரில் தொடர்கதையாக வெளிவந்தது.மூன்று குழந்தைகளுக்குத் தாயான, மேல் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவனின் செய்கையால் ஒரு போராட்டத்தையே சந்திக்கவேண்டி வருகிறது.