Description
ஓராண்டுக்கு முன்புவரை, கம்பனில் வழிநூல் எழுதும் உத்தேசம் எனக்கு ஏதும் இருந்ததில்லை. பேச்சிலும் எழுத்திலும் சில கம்பன் பாடல்களைக் கையாண்டதன்றி, வேறெந்தப் பெரும்பிழையும் செய்தவனும் இல்லை. 2012-ம் ஆண்டின் காரைக்குடி கம்பன் விழாத்தலைமையும் 2013-ம் ஆண்டின் அறக்கட்டளைச் சொற்பொழிவுமாக என்னை இக் கைமுக்குத் 'தண்டனையில் கொணர்ந்து நிறுத்தியுள்ளன. கம்பனில் நூற்றுக்கணக்கான வழி நூல்கள் உண்டு. மணி குறைவு, பதர் அதிகம் என்பது என் இலக்கிய விமர்சனம். ஆனால் படைப்பிலக்கியவாதி எவரும் அங்ஙனம் நூலொன்று எழுதியதாக எனக்குத் தகவல் இல்லை . அதிலும் குறிப்பாக, சொல் சார்ந்து வேறேதும் நூல் இருப்பதாக நானறியேன். கம்பன் என்பவன் சிங்கக் குருளைக்கான சிந்தனை. நான் வெறும் வெங்கண் சிறு குட்டன். என்றாலும் முயற்சி என்பது தேவ தூதர், அரசிளம் குமரர், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல. நான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன்.