Description
தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன.
“எனக்கும் வெற்றி, உனக்கும் வெற்றி’ என்ற சிந்தனை நான்காவது பழக்கமாகக் காட்டப்படுகிறது. இதில், மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைத்துவம் குறித்தக் கருத்துகள் உள்ளன. “முதலில் புரிந்து கொள்ளுதல், பின்னர் புரிய வைத்தல்’ என்ற பழக்கத்தை ஐந்தாவதாகக் காட்டுகிறார். இதில், பிறரது நிலையில் தன்னை இருத்திப் பார்த்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்த கொள்கைகள் கூறப்பட்டுள்ளன. ஆறாவது பழக்கம் என இவர் காட்டுவது, “கூட்டு இயக்கம்’ என்பதை! படைப்பாற்றலுடன் கூடிய கூட்டு செயல்பாடுகள் குறித்த கொள்கைகள் இதில் உள்ளன. ஏழாம் பழக்கமாக, “ரம்பத்தைக் கூர் தீட்டிக் கொள்ளுதல்’ என, எல்லாத் தளங்களிலும் சுய புதுப்பித்தலை மேற்கொள்வது குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.
ஆங்கில மூல நூலின் சாரம் கெடாமல் மொழிமாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.