Description
உயிர்களின் தோற்ற வளர்ச்சி பற்றிய கணிப்புகள் யாவும் அனுமானங்களினாலும் - கால எல்லை தாண்டி ஊடுருவிப் பார்க்கிற கற்பனைகளினாலும் நிர்ணயிக்கப்படுகிற போது சில தடயங்களையும் அடையாளங்களையும் சாட்சியமாக்குவதை வரலாறு என்று வரையறுக்கிறார்கள். வாழ்வின் பரிமாணங்களை வரிசைப்படுத்துகிற போது மனிதனுடைய நிலைப்பாடுகளை ஒழுங்குபடுத்துகிற பரிமாணங்களை இலக்கியமென்று இயம்புகிறார்கள்.
வரலாறு உடம்பு சார்ந்த உருவங்களை இனம்காட்டி நிற்க; இலக்கியம் உயிர்சார்ந்த உணர்வின் வெளிப்பாடுகளைப் பதிவு செய்கிறது. மனத்தின் கும்மாளங்களும் - கும்மியடிக்கிற குதிகளும் - எதிர்பார்ப்பின் ஏக்கங்களும் -இயலாமையின் மூச்செரிதலும் - உள்ளுயிர்த்து எழுகிற வேட்கையின் வெப்பமும் -இனக்கவர்ச்சியின் பாதையில் இயங்குகிற காமம் சார்ந்த கனவுகளும் வாழ்வுப் போராட்டமாகச் சித்தரிக்கப்பட்டு எழுத்துக்களால் இனம்குறிக்கப்படுவதை மனிதன் காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறான்.
புதிய பரிசோதனைகள் மூலம் மனித மனத்தின் துடிப்புகளையும் தாகங்களையும் - துயர மூச்சுத் திணறல்களையும் அனுபவிப்பதைக் கவிதை, கதை என்னும் அழகியல்களால் ஆராதிப்பதன் அடித்தளத்தில் அழியாத உண்மை பண்பாடு எனும் முத்திரை குத்திக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. மனிதனைச் செம்மை செய்வதென்னும் தீர்மானத்தை தலையாய கடமையாக ஏற்றுக்கொண்ட சமூக அக்கறையாளர்களாக - மனித இனம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை கண்ணுக்குப் புலப்படாத சட்டங்களாய் வடிவமைத்து நாகரிகம் பேணுபவர்களாகக் கவிஞர்கள் - முனிவர்கள் - ரிஷிகள் விளங்கினர்.
மானுட வாழ்வின் மகத்துவங்களை நடைமுறைச் செயல்களாக்கி சமுதாய அமைப்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்த இலக்கிய உத்திகள் மனித வாழ்க்கையின் பிரதிபலிப்புகளாய், வரலாற்றுத் தொலைநோக்கியின் வடிவப்புள்ளிகளாய் இன்றும் நின்று நிலவுகின்ற காட்சிகள் வியப்பின் விளிம்பு தாண்டியவைகள்.