Description
பிரான்ஸ் நாட்டில் பிறந்த டாக்டர் அலெக்ஸிஸ் காரெல் அறிவியல் மற்றும் மருத்துவ அறிஞர். அமெரிக்காவில் பல மருத்துவ ஆராய்ச்சிகளை செய்தவர். அவர் அறிவியல் பார்வையில் மனிதனை ஆராய்ந்து எழுதிய 'Man the Unknown' என்ற புத்தகத்தின் தமிழாக்கம் இது.
அலெக்ஸிஸ் காரெல் தத்துவ ஞானி அல்ல, விஞ்ஞானி. எனவே முழுக்க அறிவியல் துணைகொண்டே மனிதனை ஆராய்கிறார். மனிதனைத் திருத்தி ஒரு புனரமைப்பு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.
மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் காரணமாக அவனுடைய உடல் இயங்கும் தன்மைகளும் உள்ளன என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். பிரான்சைச் சேர்ந்த மருத்துவர் அலெக்சிஸ் காரெலின் தனது மருத்துவ அறிவின் துணை கொண்டு மனிதனின் உணர்வுகள் மனிதனின் உடலை எவ்விதம் பாதிக்கின்றன என்று ஆராய்கிறார். மனிதனின் இன்றைய வாழ்க்கைமுறை அவனுடைய உடலையும் சிந்தனைகளையும் செயல்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் விளக்மிகுகிறார்.
நவீன தொழில்துறை மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருந்தாலும் அது மனிதனின் இயல்புக்குப் பொருத்தமானது அல்ல. மனிதனின் இயல்பான வளர்ச்சியை அது தடை செய்கிறது. எனவே மனிதன் தனது வளர்ச்சிக்குப் பொருத்தமான வாழ்க்கைமுறைக்கு மாறிக் கொள்ள வேண்டும் என்று இந்நூல் வலியுறுத்துகிறது.
"இன்றைய சமுதாய அமைப்பினால் தங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் கருத்துக் கோட்பாடுகளை உதறியெறிய விரும்புகின்றனர் பலர். அவர்களுக்காகவும், நமது அரசியல், சிந்தனை, சமூகம் இவற்றில் மாறுதல் ஏற்படுவது மட்டுமன்றி, தொழில்நாகரிகம் மறைந்து மானிட சாதியின் முன்னேற்றத்தைக் குறித்துப் புதியதொரு கருத்து உருவாக வேண்டியதும் அவசியமென கருதுவோர்களுக்காகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது" என்கிறார் நூலாசிரியர். 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த இந்நூல் பல மறு பதிப்புகளைக் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.