வட்டியும் முதலும்


Author: ராஜுமுருகன்

Pages: 320

Year: 2012

Price:
Sale priceRs. 475.00

Description

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்! தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன். துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம். புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம். மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும். குவிந்து கிடக்கும் பணத்தைப் பார்ப்பதும் பார்வையே... பணத்தின் நடு வட்டத்தில் யாரோ ஒருவன் தன் காதலைப் பிழைகளோடு சொல்லி இருப்பதைப் பார்த்துச் சிலிர்ப்பதும் பார்வையே. அந்தக் காதலன் தன் காதலியோடு சேர்ந்திருப்பானா என, எவனோ ஒருவனுக்காக ஏங்கித் தவிப்பது மூன்றாம் பார்வை. இந்தப் புத்தகத்தின் அற்புதம் இத்தகைய பெருங்குணமே! கடலுக்குள் கூடுகட்ட - கனவுக்குள் கடல் கட்ட மனப்பக்குவம் வார்க்கும் மயிலிறகுத் தீண்டலே இந்தப் புத்தகம்!

You may also like

Recently viewed