Description
அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தை நாவலாக எழுதி உள்ளார் விக்கிரமன் அவர்கள்.
சோழப் பேரரசின் அரியணையைக் கைப்பற்றுவதற்கான அதிகாரப் போட்டியை முன்வைத்து, அமரர் கல்கி எழுதிய மாபெரும் வரலாற்றுப் புதினம் ‘பொன்னியின் செல்வன்’. நவீனத் தமிழர்கள் சோழப் பேரரசு குறித்துப் பெருமிதம் கொள்ளவும் அந்தக் காலகட்டத்து அரசியல், சமூக நிகழ்வுகளைத் தேடித் தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளவும் உந்திய இந்த நூல், இன்றளவும் தமிழில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ நூலின் தொடர்ச்சியாக விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினம் ‘நந்திபுரத்து நாயகி’. ‘பொன்னியின் செல்வன்’ நிறைவடைந்தபோது, தொக்கிநின்ற கேள்விகளுக்கு விடை தரும் வகையிலும் அதன் முதன்மைக் கதாபாத்திரங்களும் நிஜமாக வாழ்ந்த மனிதர்களுமான அருண்மொழிவர்மன் (ராஜராஜ சோழன்), குந்தவை, வந்தியத்தேவன் உள்ளிட்டோருக்கு அதற்குப் பின் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ளும் வாசகர்களின் வேட்கையை நிறைவேற்றும் விதமாகவும் விக்கிரமன் எழுதிய தொடர்கதை 1957-59 வரை ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. நூல் வடிவத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கடந்துவிட்ட ‘நந்திபுரத்து நாயகி’, இப்போது மூன்று பாகங்களையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது