Description
“சாபம் என்பது ‘ஹையர் ஃபிரீக்வன்ஸி’யிலிருந்து ‘லோயர் ஃபிரீக்வன்ஸி’க்குப் போ என்று அவர்கள் சபிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். க்வாண்டம் இயற்பியல் அப்படித்தான் கூறுகிறது.” என்று வித்தியாசமாக சொல்கிறார். யட்சனும் தருமனும் உரையாடும் அந்த ஒரு பகுதி போதும் தர்மத்தை புரிந்துகொள்ள. மிகமிகப் பழைய ஜராசந்தன் கதையைக் கூட அண்மைக் காலத்து லேட்டரல் திங்கிங் ( Lateral Thinking) என்று கொண்டு மாத்தி யோசி என்று நவீனப் படுத்தும் ஆசிரியரின் அணுகுமுறை மெச்சத்தக்கது. சூஃபிகள் பற்றி தமிழில் அவர் படைத்திருக்கும் பேரிலக்கியத்தில் சொக்கிப் போனவன் நான். இந்து மதத்தின் இணையற்ற இதிகாசமான மகாபாரதத்தை அவர் படித்ததும், அதிலிருந்து சில பொக்கிஷங்களைப் பிடித்ததும், அதை ஒரு நூலாக வடித்ததும் வாசித்தவர்க்கு வாய்த்த வரம்.-சுகி சிவம்மகாபாரதக் கதைகள் சிலவற்றை இன்றைய கண்ணோட்டத்தில் தேவைப்படும் நீதிகளுக்கான களங்களாகக் கண்டு ஆசிரியர் எழுதிச் செல்வது அவரது நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்று. இஸ்லாமியச் சான்றோரோடும் புத்த பெருமானோடும் ஆங்காங்கே சொல்லப்படும் ஒப்பீடுகள் நூலின் தரத்தை மிகுதிப்படுத்துகின்றன. ஜேம்ஸ் ஆலன் பற்றியும் நூலாசிரியர் போகிற போக்கில் ஒரு பெயராகக் குறிப்பிடுகிறார். இந்நூலைப் படிக்கும்போது ஒருவேளை ஜேம்ஸ் ஆலன் மகாபாரதத்தைப் படித்திருப்பாரோ என்றுகூட நம் மனத்தில் ஐயம் எழுகிறது! ராமாயணத்தைப் பற்றியும் இதுபோன்ற ஒரு நூல் எழுதுவாராக!-திருப்பூர் கிருஷ்ணன்ரூமியின் இந்நூல் ஒரு கட்டத்துக்கு மேல் மகாபாரதக் கதாபாத்திரங்களைப் பேசுவதை ரகசியமாக நிறுத்திவிடுகிறது. இது ரூமியைப் பற்றியும் என்னைப் பற்றியும் உங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிடுகிறது. பாரதத்தின் நூற்றுக் கணக்கான பாத்திரங்களுள் நம் வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்தது யார் என்றுத் தேடிப் போகிற வேட்கையைஇது வாசகனுக்கு அளிக்கிறது. இது காலத்தின் பின்னால் செல்வதல்ல. நமக்கும் பின்னால் வரப்போகிற காலத்துக்குக் கதவு திறந்து வைக்கிற பேரனுபவம். நீங்கள் ரூமியின் கண்ணைக் கொண்டு பாரதத்தை மீண்டுமொரு முறை அணுகுங்கள். இன்னும் பல தரிசனங்கள் நிச்சயம் அகப்படும்.பா.ராகவன்.