Description
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. புத்தனைத் தேடிய பயணியாக சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இந்தியாவில் பயணித்ததில் தொடங்கி கல்விக்காக நூறு கிராமங்கள், நீண்டு செல்லும் சாலை, இந்தியப் பருத்தியின் அழிவு, ரகசிய ரேடியோ, பார்ஸி இனம், ஜந்தர் மந்தர், உமர் கய்யாம், நேதாஜியின் டோக்கியோ கேடட்ஸ், தாகூரின் கல்விமுறை, இண்டிகோ புரட்சி, அவுரியின் வீழ்ச்சி, மணமகனுக்கு வலைவீசிய கப்பல்கள், மொகலாய ஓவியங்கள், புகைப்படக் கலைஞர்கள், இந்தியாவில் ஆர்மீனியர்கள், வங்காள தேசம் உருவான கதை, காலிஸ்தான் வன்முறை, பஞ்சாபிகள் படுகொலை, காந்திக்கு முந்தைய மகாத்மா, கொடுங்கோல் ஜமீன்தார்கள் என்று வரலாற்றின் கால அடுக்கின் உள்ளே புதைத்து மறைத்திருக்கும் நிகழ்வுகளை தன் பேனா முனையால் வெளிக்கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் கனமான எழுத்து, உலகம் கொண்டாடப்பட வேண்டிய, கவனிக்கத்தக்க, பாதுகாக்க வேண்டிய படைப்பாக உள்ளது. எத்தனையோ பல நூற்றாண்டுகளை ஒரு சில வரிகளுக்குள் வார்த்திருக்கிறார். இவருடைய பல ஆண்டுகளின் உழைப்பு, பல்வேறு விதமான இழப்புகள், எழுதி சேகரித்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் சேர்ந்துதான் இந்த நூலை இவ்வளவு அழகாக எழுத வைத்திருக்கின்றன. கொஞ்சமும் கூட்டியோ குறைத்தோ கற்பனை கலந்து எழுதாமல் உண்மையான வரலாற்று நிகழ்வுகளுக்குள் வாழ்ந்தவர்களைப்போல் நம்மை ஊடுருவி வரச் செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இயல்பான எழுத்து நடை. தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை வரவில்லை என்றே சொல்லலாம். சுதந்திரத்துக்காக ரகசிய ரேடியோ நடத்தி சித்திரவதை செய்யப்பட்ட உஷா மேத்தா, நேதாஜியின் கடைசிப் பயணம், ஆர்மீனியர்களின் அமைதி, வங்க தேசத்தின் முஜிபுர் ரஹ்மான், மகாத்மா ஜோதிராவ் புலே, யவனர்கள், ஜப்பானில் போராடிய நாயர் ஸான், லண்டனில் போராடிய வீரேந்திரநாத் சட்டோபாத்யாய ஆகியவர்களின் பல அரிதான தகவல்களும் இந்த நூலில் விரவிக்கிடக்கின்றன. ஜூனியர் விகடனில் ‘எனது இந்தியா’ தொடராக வரும்போதே பரவலான கவனத்துக்கு உள்ளான இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’ நூல், நவரத்தினங்கள் நிரம்பிய வரலாற்றின் தங்கப் புதையல்!