Description
கடலும் கப்பலும் எப்போதுமே அழகானவை. ‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு கப்பல் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகமானது உண்மை. கடலின் மீது மிதக்கும் பிரமாண்டமான கவிதையாகத்தான் கப்பலை நாம் பார்க்கிறோம். ஆனால், கப்பலில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிக்க வாய்ப்பு இல்லை. காரணம், ‘அவர்களுக்கு என்ன குறை? நல்ல வருமானம். சுகமான வாழ்க்கை...’ என நினைப்போம். இந்த எண்ணத்தைத் திருப்பிப்போடும் விதமாக, கடலும் கப்பலுமாக வாழும் து.கணேசன் எழுதி இருக்கும் அதிநுட்பப் பதிவு இது. பல வருடங்களுக்கு முன்னால் ‘கற்றது கடலளவு’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில் தொடராக வந்தபோதே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பல கற்பனைகளோடும், கனவுகளோடும் விரும்பி ஏற்றுக்கொண்ட பணியில் கிடைத்த அனுபவங்களை ஒரு நண்பனிடம் சொல்வதைப்போல் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கப்பல் பணியில் உள்ள நிறைகளையும் குறைகளையும் ஒளிவுமறைவின்றி நிதர்சனமாக எடுத்து வைத்திருக்கிறார். கப்பலில் இன்ஜினீயராக சேர்வது, வெவ்வேறு கப்பலுக்கு பணியை மாற்றிக்கொள்வது, கப்பல் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் விசா என பணியின் நடைமுறைகளையும் எல்லோருக்கும் விளங்கும் விதமாகப் புரியவைக்கிறார். நிலநடுக்கோட்டைக் கடக்கும் விழா, கப்பலில் கிடைக்கும் உணவு வகைகள், சரக்குக் கப்பல் பணிக்கும், பயணிகள் கப்பல் பணிக்கும் உள்ள வேறுபாடுகள், வசதிகள் என நாம் அறியாத பல தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன. கப்பலில் பயணிக்கும் அனுபவம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு நாவலுக்கு சற்றும் குறையாத இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்கையில் கப்பலில் பல நாட்கள் பயணித்த நிறைவு கிடைக்கும் என்பது நிச்சயம்!