Description
திருமூலர் அட்டமா சித்திகள் பெற்ற தவயோகி என்றும், அவர் திருக்கயிலாய மலையில் இருந்து புறப்பட்டுத் தென்னாடு வந்து, திருஆஅடுதுறைத் திருத்தலம் அடைந்து, அங்கு எழுந்தருளியுள்ள செம்பொன் தியாகேசரை வணங்கிக் கோவிலின் மேற்குப் பக்கம் உள்ள படர் அரசமரத்தடியில் அமர்ந்து யோக நிட்டை புரிந்து, ஆண்டுக்கொரு பாடல் என்று, மூவாயிரம் ஆண்டு காலம் வாழ்ந்து ; மூவாயிரம் தமிழ்ப்பாடல்களைப் பாடினார் என்றும், அவையே திருமந்திரம் எனவும் கூறப்படுகிறது, இது திருமூலர் வாக்காகவே ஒன்பதாம் தந்திரத்தின் ஈற்றில் மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் என்று பதிவாகி யுள்ளது. இனி அவர் கயிலையிலிருந்து புறப்பட்டுத் தென்னாடு வந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், தெய்வச் சேக்கிழார் தம் திருத்தொண்டார் புராணத்தில்யிலாயத்து ஒரு சித்தர் பொதியில் சேர்வார் காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்” என்று குறிப்பிடுவதே இதற்கான சான்றாகும். சரி, திருமூலர் என்பதுதான் இவர் இயற்பெயரா எனில் இல்லை . இவர் பெயர் சுந்தரநாதன் என்று கூறத்தக்க சில குறிப்புகள் உண்டெனினும், கொள்ளத்தக்க உண்மை, இவர் இயற்பெயர் தெரிந்திலது என்பதே! பின் எப்படி இவர் திருமூலர் என்றழைக்கப்பட்டார்? என்று கேட்டால் இங்கேதான் திருமூலர் வாழ்க்கை தொடங்குகிறது.