Description
எனக்குத் தென்னாட்டுப் புரட்சியாளர்களின் மீது இருந்த ஈடுபாடு, அவற்றை நோக்கிய திரைப்பட முயற்சி, தேவதை திரைப்படத்தில் என் பங்களிப்பு, தமிழன் வீரம் என்றும் பேச்சு தொடர்ந்து கடைசியில் தமிழர்வீரம் குறித்த ஓவியங்கள் கொண்ட புத்தக வடிவத்தின் அவசியம் குறித்தும் சொல்லி முடித்தனர் தாசீசியஸும், வரதராஜனும். அவர்களின் முனைப்பு எனக்குள் ஒரு கனவாக மலர்ந்து தொடர்ந்தது. சரித்திரப் பின்னணியைக் கொண்ட தமிழ்த் திரைப்படமுயற்சி நம் திரைப்பட வரலாற்றில் 40 ஆண்டுகளாக அறுந்து போன ஒன்று. தமிழ்த்திரைப்பட உலகம் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பம்பாயில் தயாரான மராட்டிய சினிமாவின் காட்சிப் பாதிப்பிலிருந்தும், நம் காலண்டர் ஓவியத் தன்மையிலிருந்தும் ஓவியர் மணியமின் பொன்னியின் செல்வன் போன்ற தோற்றப் பாதிப்புகளிலிருந்தும் விலகி உண்மையான தமிழ் வீர வாழ்வைத் தேடி நகரவே இல்லை. பழைய சரித்திரப் பின்னணியைக் கொண்ட தமிழ்ப் படங்களில் அரங்கம் மற்றும் முன்னணிக் கதாபாத்திரங்களின் பெரும்பாலான மராட்டிய சினிமாவின் பாதிப்பு மிக்க மிகையான அலங்காரத் தோற்றங்களைத் தாண்டி அவற்றில் வருகிற மற்றபடி சாதாரண மக்கள், தொழிலாளி, வியாபாரி, விவசாயி, புலவர், வைத்தியர் என்று அனைத்து தரப்பினரும் பெரும்பாலும் உண்மைத் தோற்றத்தில் இருப்பர். உண்மையை நோக்கிய நகர்வின் பகுதியில் ஓவியர் கோபுலுவும் இருக்கிறார்.முழுமையான ஒரு தரிசனத்திற்கான இவற்றை நோக்கிய என்னுடைய ஐந்து ஆண்டு காலத் திரைப்பட முயற்சியும் உழைப்பும் ஒரு நடிகரின் தெளிவின்மையாலும், மற்றொரு நண்பரின் துரோகத்தாலும் பின்னடைவையும் சிறு சோர்வையும் எனக்கு ஏற்படுத்திவிட்டது. ஆனால் அக்கனல் என் ஓவியங்களின் வழிதொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. நான் தீட்டிக்கொண்டே இருந்த “தமிழ் வீரர் வரிசை” ஓவியங்கள் என்னிடம் நிரம்பிவிட்டது. இத்தொடர் செயல் எனக்கு மனநிறைவையும், உத்வேகத்தையும் அளித்திருக்கிறது, என்றே சொல்ல வேண்டும்.ஒருமுறை இவ்வோவியங்களோடு தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்பு சேர்ந்து இருந்தால் நன்றாய் இருக்கும் என்பதுடன் அதன் அவசியத்தையும் நான் பேசியபோது, அதை தான் முன்னிருந்து செய்வதாக நண்பர் திரு. அமுதராசன் முனைப்போடு செயலாற்ற, தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்பை விரிவாக நண்பர் திரு. கணேசகுமாரன் எழுத இப்புத்தகம் வடிவம் பெற்றது.- டிராட்ஸ்கி மருது.