Description
இங்கிலாந்தில் பிறந்த ஜே.கே. ரௌலிங்குக்கு அடுத்த ஆண்டுதான் ஐம்பது வயது நிறைவடைகிறது. அதற்குள் இவரது சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பைவிடவும் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.கணவன், மூன்று குழந்தைகளோடு எடின்பர்க் நகரில் வசிக்கும் ரௌலிங் சம்பாதித்த சொத்து அவ்வளவும் எழுதிச் சம்பாதித்தது என்பதை நம்மவர்கள் நம்புவது சிரமமோ சிரமம்.1997ஆம் ஆண்டில் வெளியான ஹாரி பாட்டர் அண்ட் பிலாஸபர்ஸ் ஸ்டோன் என்ற முதல் தொகுப்பு இப்போது அழகான தமிழில் ஹாரி பாட்டரும் ரசவாதக்கல்லும் என்ற தலைப்பில் வெளிவந்துவிட்டது.தவிர்க்கமுடியாமல் இடம்பெற்றுள்ள ஹாக்ரிட், மெக்கானல், ஹாக்வார்ட்ஸ், ரான், ஹெர்மயனி, நிக்கோலஸ் பிளமல் போன்ற பாத்திரங்கள், இடங்களின் பெயர்கள் மட்டும் நெருடாமலிருந்தால் இதை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது என்று சொல்லவே முடியாது.அத்தனை சரளமான மொழிநடை. சராசரியான நம்மைப் போன்ற மனிதர்களை மக்கள் என்கிறார்கள். மந்திர ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தி நாசமாய்ப் போன ஒருவனின் பெயரைக்கூடச் சொல்ல விரும்பாமல் அவனைப் பெயர் சொல்லப்படக்கூடாதவன் என்கிறார்கள்.அவனால் கொல்லப்பட்ட மந்திரவாதி தம்பதியின் பிள்ளைதான் ஹாரிபாட்டர். வேண்டா வெறுப்பாக, ஒதுக்கி வைக்கப்பட்டு மறந்தேபோன சகோதரியின் பிள்ளையை வளர்க்க வேண்டிய பொறுப்பு பெட்டூனியாவின் தலையில் விழுகிறது. அங்கேயிருந்து சிறுவன் ஹாரிபாட்டர் மாந்திரீகப் பள்ளிக்குப் படிக்கப்போவதுதான் இந்தத் தொகுதியில் சொல்லப்படும் கதை.இப்படியெல்லாம்கூட நடக்குமா? என்றெல்லாம் யோசனையே பண்ணாமல் பிரமிப்போடு படிக்கத் தூண்டுகிற இந்தப் புத்தகங்கள் உலகளாவிய பிரபலம் பெற்றதில் வியப்பதற்கு ஒன்றுமே இல்லை.-சுப்ர.பாலன்.நன்றி: கல்கி, 3/5/2014.