Description
அறியாத வரலாறு.வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெரிய பெரிய பாளங்களாகக் கொண்டுவரப்படும் ஐஸ் கட்டிகளே வெள்ளையானையாக இந்நாவலில் உருவகப்படுத்தப்படுகிறது.1878ஆம் ஆண்டு சென்னை ஐஸ்ஹவுஸில் நடந்த ஒரு வேலைநிறுத்தம்தான் நாவலின் களம். 300 தலித் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த எதிர்ப்பொலி. தங்களோடு பணியாற்றிய ஒரு தொழிலாளியும் அவனுடைய மனைவியும் அமெரிக்க நிறுவன கங்காணிகளால் கொல்லப்பட அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கின்றனர். அதுதான் இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தம் என்று குறிப்பிடுகிறார் நாவலின் ஆசிரியர்.இரண்டு தலித் தொழிலாளர்கள் கங்காணிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரிக்க ஆரம்பிக்கிறார். அயர்லாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்து ஆங்கிலேய காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் ஏய்டன். அவருடைய பார்வையிலேயே அக்காலகட்டமும் சூழலும் மக்களின் வாழ்க்கையும் அவருடைய மனவோட்டங்களுமாக நாவல் விரிவடைகிறது.ஐஸ்ஹவுஸில் வேலை பார்க்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக்கேட்க முனைகிறார் ஏய்டன். அவருக்கு ஓரளவு படிப்பறிவும் பட்டறிவும் கொண்ட தலித் இளைஞனான காத்தவராயன் உதவுகிறான். தாதுபஞ்சத்தால் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஏழ்மையை எப்படி தங்களுக்கு சாதகமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதிய ஆதிக்க சாதி வணிகர்களும் முதலாளிகளும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும் நாவலில் விளக்கப்படுகிறது.அவர்களுடைய ஆதிக்க சாதி மனோபாவம் எந்த அளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதையும் சில காட்சிகளில் விளக்குகிறார். அடிபட்டு கீழே கிடக்கிற தலித்தை தூக்கிச் சொல்லும்போது இரும்பினைப்போல நிற்கிற காளமேகத்தின் சிப்பிபோன்ற கண்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன.- கே.கே.நன்றி: அந்திமழை, 1/12/13.