Description
வெல்லிங்டன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவத் தேவைகளுக்காக 1852 - 1860 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஊர். இந்த வரலாற்றுப் பெருமையைத் தவிர தனிப்பட்ட முக்கியத்துவம் இல்லாத இடம். இன்றும் ராணுவத் தளத்தை வைத்தே ஊர் அறியப்படுகிறது. அந்த உருவாக்கத்தில் நீலகிரி மலையின் பூர்வகுடியினரும் முதலாவது குடியேற்ற இனத்தவரும் தமது நிலத்திலிருந்து பெயர்ந்தனர். அந்நியர்களும் சமவெளி மனிதர்களும் மலையேறி வசித்தனர். அவர்கள் அந்த இடத்தால் அறியப்பட்டனர். காலப்போக்கில் அந்த ஊர் அதன் மனிதர்களால் அறியப்பட்டது. எனினும் அந்த அறியப்படாத மனிதர்களை வரலாற்றின் மௌன இடைவெளிக்குள் இந்த நாவல் தேடுகிறது. அந்த வகையில் இது சரித்திர இடத்தின் கதை. இன்று வெல்லிங்டனின் வரலாறு சில வரிகளிலாவது எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு வாழ்ந்து வெளியேறியவர்களின் தடயங்கள் எதுவுமில்லை. மனிதர்களால்தான் ஊர் பொருள்படுகிறது என்பதால் அந்த இடத்தில் வாழ்ந்த சில மனிதர்களின் கதையை புனைந்து பார்க்கிறது இந்த நாவல். அந்த வகையில் இது மனிதர்களைப் பற்றிய கற்பனை கலந்த வரலாறு.நாவலின் மையப் பாத்திரமான சிறுவன் வெல்லிங்டனில் வளர்ந்து பதின்வயதில் ஊரையும் தன்னைச் சுற்றியிருந்த மனிதர்களையும் புரிந்துகொள்கிறான். கூடவே தனக்கு முன்னும் தன்னோடும் வளர்ந்த காலத்தையும். அந்த வகையில் இது வெல்லிங்டனின் மானுடக் காலத்தின் பதிவு.