Description
‘பிள்ளையார் சுழிபோட்டு எதையும் தொடங்கு’ என்பது எதற்காக? ஆனைமுகத்தானை மனதில் ஏந்தி செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பதற்காகத்தானே! அதனால்தான் விநாயகர், முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகை செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகரைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தலத்திலும் விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், முக்குருணி விநாயகர், கன்னி மூல கணபதி, வியாக்ர சக்தி விநாயகர் என விசேஷப் பெயர்களில் அழைக்கப்பட்டு அருள்புரிந்து வருகிறார். தமிழகத் திருக்கோயில்கள் ஒவ்வொன்றிலும் தனிக் கோயில் கொண்டுள்ள விநாயகர் ரூபத்துக்குச் சிறப்புப் பெயர் வருவதற்கு என்ன காரணம்? அவருடைய பெயர்க் காரணத்துக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் என்ன? ஒவ்வொரு விநாயகர் பெயரிலும் ஒளிந்துள்ள சக்தியும், அவரை வழிபட்டால் உண்டாகும் மகிமையும் என்னென்ன? அத்தனையையும் அருள் மணம் கமழ இந்த நூலில் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் நாடு திரும்பிய போது அந்த ஆயுதங்கள் களவு போகாமல் அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஆயுதங்களை விநாயகப் பெருமான் பத்திரமாக காத்துவைத்திருந்தார் என்று சொல்வார்கள். பூமியில் தாழ்வான, மேடான பகுதிகள் உண்டு. ஈசானிய மூலை தாழ்வாக இருப்பதால் அதைச் சமன் செய்யும் வகையில் கன்னி மூலையில் விநாயகர் அமர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். அந்தக் கன்னி மூல கணபதியை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் மேம்படும்; தொழில் அபிவிருத்தி ஏற்படும்; நல்ல எண்ணங்கள் உருவாகும். இவ்வாறு சக்தியையும், ஞானத்தையும் பக்தர்களுக்கு அளிக்கும் விநாயகருடைய பெயர் காரணங்களை அறிந்து நாம் பயன்பெற வேண்டாமா? எந்த விநாயகரிடம் வேண்டினால் என்ன சக்தி கிடைக்கும்? இந்தப் புத்தகத்தில் எல்லாம் உள்ளது. சக்தி விகடனில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. கணநாதனின் கடைக்கண் பார்வை கிடைக்கப் பக்கத்தைப் புரட்டுவோம் வாருங்கள்!