Description
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21-ம் நாள்! 22 ஆண்டுகள் கடந்த பின்னாலும் ராஜீவ் கொலை இன்னும் மர்மம் நிறைந்ததாகவும், ரகசியம் விலகாததாகவும் இருக்கிறது. எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள்தான், வழக்கு விசாரணையை விமர்சனம் செய்வார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை செய்த அதிகாரிகளே... விசாரணையின் போக்கை விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ராஜீவ், சர்வதேச சதியின் காரணமாக கொலை செய்யப்பட்டார் என்பது உண்மை. அதைவிட உண்மை, அந்தச் சதியை நடத்தியவர்கள் இன்னும் சிக்காமல் இருக்கிறார்கள் & என்பதே வழக்கறிஞர் துரைசாமியின் வாதம். ராஜீவ் கொலைக்கு முன்பும், பின்பும், விசாரணையின் போதும் எழுந்த நூற்றுக்கணக்கான கேள்விகளை துரைசாமி இந்தப் புத்தகத்தில் எழுப்புகிறார். ராஜீவ் வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த போதும், அந்த விசாரணையின் போதும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் இக்கேள்விகளை கடந்த 22 ஆண்டுகளாக எழுப்பி வருபவர் வழக்கறிஞர் துரைசாமி. சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான இவர், தன்னுடைய பல்வேறு சட்ட அனுபவங்களின் காரணமாக இந்நூலை தெளிவாக வழங்கியுள்ளார். இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த ஒருவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையையே இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தையும், ஒரு வழக்கை எப்படி நுணுக்கமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்ற துல்லியத்தையும் இந்நூலைப் படிக்கும் போது வாசகர்கள் உணர முடியும்.