Description
பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழில் வெளியான 100 சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார். இந்தக் கதைகளைத் தேர்வு செய்தது பற்றியும், கதைகளின் சிறப்பு பற்யும் விளக்கி, ராமகிருஷ்ணன் எழுதியுள்ள 22 பக்க முன்னுரை நன்றாக உள்ளது.புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் உள்பட சில எழுத்தாளர்களின் 3 கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வேறு சில எழுத்தாளர்களின் 2 சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் ராமகிருஷ்ணனின் 2 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.1092 பக்கங்கள், 650ரூபாய் விலை, 100 கதைகள். அதிலும் சில எழுத்தாளர்களுக்கு இரண்டு, மூன்று கதைகள். இந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்க்கும் நடுநிலை வாசகர்கள் இதில் ஏன் கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி, மு. வரதராசனார் போன்ற சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் இடம் பெறவில்லை? என்று கேள்வி எழுப்புவார்கள்.தங்களை முற்போக்கு எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்வோர், லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கும் கதைகளை வணிக எழுத்துக்கள் என்று நிராகரித்து வருகிறார்கள் என்பது, அத்தகைய வாசகர்களுக்கு தெரியாது. பல லட்சம் வாசகர்களைக் கொண்ட கல்கி, முதல் ஞானபீட விருதை தமிழுக்குப் பெற்றுத்தந்த அகிலன் ஆகியோர் இந்த புத்தகத்தில் இடம் பெறாவிட்டாலும் தமிழர்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதை இலக்கியம் பற்றி நன்குணர்ந்த வாசகர்கள் அறிவார்கள்.