Description
சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி சுவாரசியமானதாகத்தான் இருந்ததா? இல்லவே இல்லை, கதைகளைவிட மகாராஜா, மகாராணிகளின் நிஜ வாழ்க்கை பல மடங்கு சுவாரசியமானவை என்று ஆதாரங்களுடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு சமஸ்தானத்துக்குப் பின்னும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் தகவல்களை, நுணுக்கமான விஷயங்களை அழகாக ஒரு கதைபோலச் சொல்லிச் செல்கிறது - அகம், புறம், அந்தப்புரம். கோமான்களின் வாழ்க்கை, ஆடம்பரக் கோமாளிகளின் வாழ்க்கையை மட்டும் அலங்காரத்துடன் சொல்லாமல், காலத்துக்கும் குருதி சிந்தி உழைக்கும் குடிமக்களின் வாழ்க்கையையும் அதற்குரிய அவலத்துடன் பதிவு செய்திருப்பது இந்தப் புத்தகத்துக்குரிய சிறப்பு. அரண்மனைக்குள்ளும் அந்தப்புரத்துக்குள்ளும் மட்டுமே சுற்றிவராமல், அதைத்தாண்டி வெளியில் பல அரிய வரலாறுகளையும், காலனியாதிக்க இந்தியா குறித்த சரித்திரத்தையும் ஒருங்கே சேர்த்துச் சொல்லும் இந்தப் புத்தகம், நிச்சயம் ஒரு வரலாற்றுப் பெட்டகம். இத்தனைப் பெரிய புத்தகமா, இதைப் படித்து முடிக்க இயலுமா என்ற மலைப்பு முதலில் தோன்றலாம். ஆனால், படிக்க ஆரம்பித்த பின், எந்தவொரு இடத்திலும் சலிப்போ, அலுப்போ தோன்றாமல், ஆசிரியரின் எழுத்துகள் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றன. நவரச அனுபவங்களைத் தருகின்றன. எழுதும் விதத்தில் எழுதினால் சரித்திரத்தைவிட சுவாரசியமான விஷயம் எதுவுமே கிடையாது என்பதை இந்நூல் பறைசாற்றுகிறது. புத்தகப் பிரியர்கள் ஒவ்வொருவருமே தங்கள் சேகரிப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகங்களில் இந்த நூலும் ஒன்று. ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் அவர்களது படைப்பில் மாஸ்டர் பீஸ் உண்டு. எழுத்தாளர் முகில் இதுவரை எழுதியுள்ள புத்தகங்களில், ‘அகம், புறம், அந்தப்புரம்’தான் அவருடைய மாஸ்டர் பீஸ்