Description
ராமாயண காவியத்தின் நாயகனான ஸ்ரீராமன், ஒரு மாதக் குழந்தையாகத் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, அன்னை கௌசல்யை தன் குழந்தையை ரசித்து மகிழ்வதில் தொடங்கி ஸ்ரீ ராமர் சரயூ நதியில் கலந்து விண்ணுலகம் செல்வது வரை உள்ள ராமாயணக் கதையிலுள்ள முக்கிய நிகழ்வுகள் 44 அத்தியாயங்களாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் வால்மீகி ராமாயணத்திலிருந்தும், ஒரு சில சம்பவங்கள் வேறு சில ராமாயணங்களிலிருந்தும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் ராமரைப் பற்றிய கீர்த்தனைகளிலிருந்தம் நாட்டுப்புறப் பாடல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.ராம காவியத்திலுள்ள பாத்திரங்களின் உரையாடல்கள் எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக, சீதையும் சகோதரிகளும் தங்கள் திருமணம் பற்றிப் பேசுவது, ஸ்ரீ ராமர் வில்லை முறித்த பின் பரசுராமருடன் நடக்கும் விவாதம், ராவணன் ஜடாயுவை வாளால் வெட்டிய பின் தன் மனைவி மண்டோதரியுடன் பேசும் உரையாடல் போன்றவை.காவியத்தை எளிமைப்படுத்துதல் அரிய செயல். அதனைச் சிறப்பாகச் செய்துள்ளார் நூலாசிரியர்.ராமனைத் தெய்வமாகக் கொண்டு லட்சிய நாயகனாக்கிய கம்பரிலிருந்து மாறுபட்டு, மனிதப் பண்புகளில் சிறந்தவனாக வடித்திருக்கும் வால்மீகியின் ராமாயணத்தை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் நூல் இது.நன்றி: தினமணி, 13/1/2014.